Published : 29 Jul 2015 09:32 AM
Last Updated : 29 Jul 2015 09:32 AM

நான் இறந்தால் விடுமுறை அளிக்காதீர்கள் எனக் கூறியவர்: சந்திரபாபு நாயுடு புகழஞ்சலி

“தான் இறந்தால் விடுமுறை அளிக்க வேண்டாம்” எனக் கூறிய பெருமை மிக்கவர் அப்துல் கலாம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

அப்துல் கலாம் மறைவுக்கு, ஹைதராபாதில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் இரங்கல் தெரிவித்தது. முன்னதாக அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது.

அதன்பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இரங்கல் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் எனக்கு மிக்க நெருங்கிய, உத்தம நண்பரை போன்று விளங்கியவர். அவரது மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

உண்மையான `பாரத ரத்னா’ அவர். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்தால் சாதிக்க முடியாதது என்பது எதுவும் இல்லை என்பதை நமக்கு உணர்த்தியவர் அப்துல் கலாம். அவரது வாழ்க்கை வருங்கால சந்ததியினருக்கு சிறந்த பாடம். தனது அறிவியல் அறிவாற்றலால் இந்தியாவின் புகழை உலகிற்கு உணர்த்திய மகான். தான் இறந்தால், விடுமுறை அளிக்க கூடாது எனக் கூறியவர் அவர்.

மாணவர்களின் எதிர்காலத்தை அவர்களின் பெற்றோர்களை விட அதிகம் யோசித்தவர் அப்துல் கலாம். அதனால்தான் பல பல்கலைக்கழகங்களுக்கு சென்று தனது கடைசி நிமிடம் வரை மாணவர்களுடன் தனது நேரத்தை செலவழித்தார்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, நாட்டின் முதல் குடிமகனாக உழைப்பால் உயர்ந்த அப்துல் கலாம் கண்ட கனவுகளை இளைஞர் சமுதாயம் நிறைவேற்ற வேண்டும். ஜாதி, மதம், அரசியல் போன்ற எந்த சாயங்களையும் பூசிக்கொள்ளாத இந்தியாவின் உண்மையான முகம் அப்துல் கலாம்.

சமீபத்தில் அனந்தபூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அவர் பங் கேற்றார். அவரது மறைவு நாட்டுக்கு மிக பெரிய இழப்பாகும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. சில தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதே போன்று தெலங்கானா அரசு, கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று மாநிலம் முழுவதும் அரசு விடுமுறை அளித்தது.

எனது மானசீக குரு என ஆந்திரா, தெலங்கானா மாநிலங்க ளின் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் புகழஞ்சலி செலுத்தினார். தெலுங்கு திரைப்பட உலகின் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என பலர் மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x