Published : 22 Sep 2019 09:29 AM
Last Updated : 22 Sep 2019 09:29 AM

காதி உடை அணிபவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு: ஹரியாணா காங்கிரஸின் புதிய நிபந்தனைகள்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

காதி உடை அணிபவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என ஹரியாணா மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. இத்துடன் சேர்த்து 12 வகையான வித்தியாசமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஹரியாணாவின் 90 தொகுதி களுக்கு ஒரே கட்டமாக அக்டோபர் 21-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக் காக, அக்கட்சி சார்பில் அச்சடிக் கப்பட்ட விருப்ப மனு வழங்கப் படுகிறது. அதில் மனுதாரருடைய சுய விவரம் மற்றும் 12 வகையான நிபந்தனைகள் உள்ளன. அதை ஏற்றுக்கொண்டு உறுதிமொழி வழங்குபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிபந்தனைகள் இதுவரையிலும் எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் வித்தியாசமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

“எந்த நேரமும் காதி உடை களையே அணிய வேண்டும். போதைப் பொருள், மதுப் பழக்கம் இருக்கக் கூடாது. கடந்த 2018 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பி னராக இருப்பது அவசியம். இத்து டன் ரூ.325 ஐ வைப்புத் தொகை யாக செலுத்த வேண்டும். விருப்ப மனுவுடன் வழங்கப்படும் 25 விண் ணப்பங்களில் புதிய உறுப்பினர் களை சேர்த்து ஒப்படைக்கப்பட வேண்டும்” என்பன போன்ற நிபந்தனைகள் உள்ளன.

அத்துடன், கட்சிக் கொள்கை களுக்கு எதிராக பேச மாட்டேன் என்றும் மதச்சார்பின்மை, சமூக சம உடைமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை பேணிக் காப்பேன் என்றும் உறுதி அளிக்க வேண்டும். இதுபோல மொத்தம் 12 வகையான நிபந்தனைகளை காங்கிரஸ் விதித்துள்ளது. விருப்ப மனு கட்டணம் பொதுப் பிரிவின ருக்கு ரூ.5,000 எனவும், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவின ருக்கு ரூ.2,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஹரியாணா மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வட் டாரம் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “காதி உடைகளின் அடையாளமாக காங்கிரஸார் விளங்கினர். ஆனால் இப்போது காங்கிரஸார் மத்தியில் காதி உடைகளை அணியும் வழக்கம் குறைந்து வருகிறது. அதேநேரம் பாஜகவினர் காதி உடையை அணிவது அதிகரித்து வருகிறது. இதுபோல பல நல்ல பழக்கவழக் கங்களை காங்கிரஸ் இழந்து வரு வதால், இதுபோன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன” என்றனர்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் ஹரியாணா காங்கிரஸின் சண்டிகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். இதன் நகல் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இ-மெயிலில் அனுப்ப உத்தர விடப்பட்டுள்ளது. இவற்றை ஆராய்ந்து வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்காக ஒரு தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான இக்குழு வில் காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவர் குமாரி செல்ஜா மற்றும் முன்னாள் முதல்வர் பூபேந்தர்சிங் ஹுடா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸுக்கு இப்போது ஹரியாணாவில் 16 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

ஹரியாணா தேர்தலில் போட்டியிட ஆளும் பாஜகவைச் சேர்ந்த ஏராளமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில் ஒரு தொகுதிக்கு சராசரியாக 18 பேர் விருப்ப மனு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x