Published : 20 Sep 2019 11:56 AM
Last Updated : 20 Sep 2019 11:56 AM

டெல்லியின் கடைசி யானை லக்‌ஷ்மி ஹரியாணா முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது

புதுடெல்லி

டெல்லியின் கடைசி யானையான லக்‌ஷ்மி ஹரியாணாவில் உள்ள பாதுகாப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது.

கடந்த செவ்வாய் இரவு கிழக்கு டெல்லியின் அக்‌ஷர்தாம் கோயில் அருகே இருந்து லக்‌ஷ்மியை போலீஸார் மீட்டனர். அதன் பாகன் சதாமையும் போலீஸார் கைது செய்தனர்.

2 மாதங்களுக்கு முன்னர் லக்‌ஷ்மி காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட லக்‌ஷ்மி முகாமுக்கு அனுப்பப்பட்டது. இனி டெல்லியில் யாரும் யானையைப் பார்க்க முடியாது.

சர்ச்சையின் பின்னணி:

டெல்லி சாகாபூர் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் அலி. இவர் வளர்த்த 35 வயதான பெண் யானை லக்‌ஷ்மி. இந்த யானையை சதாம் என்ற பாகன் பராமரித்து வந்தார்.

இதற்கிடையே யானை லக்‌ஷ்மியை சரியாகப் பராமரிக்கவில்லை என்று கூறி யூசுப் அலிக்கு, வனத்துறை நோட்டீஸ் அனுப்பியது. யானையைப் பறிமுதல் செய்யப்போவதாகவும் எச்சரித்திருந்தது. இதனால் யூசுப், டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றமோ, வனத்துறைக்குச் சாதகமாக உத்தரவிட்டது.

யானையைப் பராமரிப்பதற்கான இடத்தை ஏற்பாடு செய்தபின் யானையைப் பறிமுதல் செய்யும்படி கூறியது. ஆனால், யானையைப் பறிமுதல் செய்யச் சென்ற போது யானை அங்கு இல்லை. யூசுப் அங்கிருந்து காலி செய்திருந்தார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு யானையை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் இரவு கிழக்கு டெல்லியின் அக்‌ஷர்தாம் கோயில் அருகே இருந்து லக்‌ஷ்மியை போலீஸார் மீட்டனர்.
லக்‌ஷ்மியை மீட்ட காவல்துறையினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி, வனத்துறை அதிகாரிகள் லக்‌ஷ்மியை ஹரியாணாவில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பிவைத்தனர்.

முன்னதாக, டெல்லி நீதிமன்றம், குடிமக்கள் வாழும் பகுதிகளில் இருந்து யானைகளை விலக்கிவைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில்தான், டெல்லியில் கடைசி யானையான லக்‌ஷ்மி ஹரியாணாவில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஹரியாணா முகாமின் ஆய்வாளர் சுல்தான் சிங் கூறும்போது, "லக்‌ஷ்மி இங்கு இன்று காலை 6 மணிக்கு எங்கள் முகாமுக்கு கொண்டுவரப்பட்டது. உடனே அதனைக் குளிப்பாட்டி சுத்தப்படுத்தினோம். அதற்கு ஜாஸ்மின் என்று புதிய பெயரும் கொடுத்துள்ளோம். லக்‌ஷ்மிக்கு என பிரத்யேகமாக ஊழியர் ஒருவரை நியமித்துள்ளோம். தற்போது இங்கு ஐந்து யானைகள் உள்ளன. லக்‌ஷ்மிக்கு தடுப்பூசிகள் போட்டுப் பாதுகாப்போம். 4 வாரங்களுக்கு அதன் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டியிருக்கிறது" என்றார்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x