Published : 14 Sep 2019 11:56 AM
Last Updated : 14 Sep 2019 11:56 AM

கடும் விமர்சனம் எதிரொலி: 40 ஆண்டுகளுக்குப் பின் வருமான வரியை சுயமாகச் செலுத்த உ.பி. முதல்வர், அமைச்சர்கள் முடிவு

லக்னோ

40 ஆண்டுகளுக்குப் பின், உத்தரப் பிரதேசத்தில் முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் தங்களின் வருமான வரியை தங்களுக்கான ஊதியத்தில் இருந்து செலுத்த முடிவு செய்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளாக உ.பி. முதல்வர்கள், அமைச்சர்களுக்கு வருமான வரியை அரசை செலுத்தி வருகிறது என்று செய்தி வெளியாகி நேற்று ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால், வேறுவழியின்றி, இனிமேல் தங்களின் வருமான வரியை தாங்களே செலுத்த அமைச்சர்களும், முதல்வரும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது

உ.பி.யில் கடந்த 1981-ம் ஆண்டு முதல்வராக இருந்த வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில்தான் அமைச்சர்களும், முதல்வரும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டும், அந்த வருமான வரியை அரசே செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 1981-ம் ஆண்டு உ.பி. அமைச்சர்கள் ஊதியம், படிகள், சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின் உ.பி. மாநிலத்துக்கு இதுவரை 19 முதல்வர்கள், 1000 அமைச்சர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாநில அரசுதான் வருமான வரியைச் செலுத்தி வருகிறது.

யோகி ஆதித்யநாத், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி, கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங், ஸ்ரீபதி மிஸ்ரா, வீர் பகதூர் சிங், நரேன் தத் திவாரி ஆகியோர் இந்தச் சட்டத்தால் பலன் அடைந்தவர்கள். இவர்களின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களும் பலன் பெற்றுள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளாக உ.பி. அமைச்சர்கள் யாரும் வருமான வரி செலுத்துவதில்லை, அவர்களுக்குப் பதிலாக அரசுதான் செலுத்துகிறது என்ற செய்தி நேற்று வெளியானது. இதுகுறித்து உ.பி. அரசியல்வாதிகளிடமும், அமைச்சர்களிடமும் கேட்டபோது, தங்களுக்கு இந்த நடைமுறை குறித்து ஏதும் தெரியாது என்று மழுப்பலாகப் பதில் அளித்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை கூடியது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், முதல்வருக்கு வருமான வரியை அரசே செலுத்தும் சட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் முதல்வரும், அமைச்சர்களும் தங்களின் வருமான வரியை அவர்களே செலுத்த வேண்டும், அரசின் கரூவூலத்தில் இருந்து செலுத்தமுடியாது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா விடுத்த அறிக்கையில், " உ.பி. முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் தங்களின் வருமான வரியை இனிமேல் அவர்களே செலுத்துவார்கள். அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படாது" எனத் தெரிவித்தார்.

கடந்த நிதியாண்டில் உ.பி.அரசு அமைச்சர்களுக்கு வருமான வரியாக ரூ.86 லட்சம் செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உ.பி.யில் வலிமையான கட்சியாக இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கடந்த 2012-ம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.111 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், வருமான வரியை ஒருமுறைகூட ஆட்சியில் இருந்தபோது செலுத்தியதில்லை.

அதேபோல, சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு ரூ.37 கோடி சொத்து இருந்தும் அவரும் தனது ஊதியத்தில் இருந்து வருமான வரி செலுத்தியதில்லை.

முதல்வர் யோகி ஆதித்யநாத் 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனது பிரமாணப் பத்திரத்தில் ரூ.95 லட்சத்து 98 ஆயிரத்து 53 இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வருமான வரி செலுத்தியதில்லை.

உ.பி. அமைச்சர்கள் இனிமேல் வருமான வரி செலுத்துவார்கள் என்று தீர்மானம் நேற்று மாலை எடுக்கப்படும் முன்பு, மாநில மின்துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மாவிடம், இந்தச் சட்டத்தின்படி வருமான வரியை அரசு செலுத்துகிறதா என்று கேட்டதற்கு ஆம், வருமான வரியை அரசுதான் செலுத்துகிறது. இதுகுறித்து விரைவில் அரசு முடிவு எடுக்க உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான பி.எல். பூனியா நிருபர்களிடம் கூறுகையில், "அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஊதியம் பலமுறை உயர்த்தப்பட்டுவிட்டபோதும் அவர்களின் வருமான வரியை அரசே செலுத்தியதை நியாயப்படுத்த முடியாது. உடனடியாக சட்டத்தை மறு ஆய்வு செய்து ரத்து செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்

இந்தச் சட்டம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் பல தலைவர்களிடம் நிருபர்கள் கேட்டபோது, தங்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருப்பதே தெரியாது என்று கூறினார்கள்.

முன்னாள் நிதியமைச்சர் லால்ஜி வர்மா கூறுகையில், ''தனக்கு இப்படி ஒரு சட்டம் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன்.இனிமேல் என்னுடைய வருமான வரியை நானே செலுத்துவேன்'' எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x