Published : 13 Sep 2019 05:12 PM
Last Updated : 13 Sep 2019 05:12 PM

நல்ல கேட்ச் பிடிக்க பந்து மீது கவனம் தேவை, இல்லாவி்ட்டால் புவியீர்ப்பு விசையைத்தான் குறை சொல்வீர்கள்: பிரியங்கா காந்தி கிண்டல்

புதுடெல்லி

கிரிக்கெட்டில் கூட கேட்ச் பிடிக்க வேண்டுமென்றால் பந்து மீது கவனம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால், புவியீர்ப்பு விசை, கணிதம் மீதுதான் குறை சொல்வோம் என்று மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கிண்டல் செய்துள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது. முக்கிய 8 துறைகளின் உற்பத்தியும் 2.5 சதவீதமாகக் வீழ்ச்சி அடைந்தது. ஆட்டமொபைல் துறையிலும் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.

பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி நகர்ந்து வருவதாகவும், நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், பொருளாதார வளர்ச்சியை தூண்டிவிடுவதற்கான வழிகள் குறித்து அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது, அவர் கூறுகையில், " 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதாரமாக உயர்வடைவதன் பாதையில்தான் நாடு சென்று கொண்டிருக்கிறது தொலைக்காட்சியில் காட்டப்படும் அந்த கணக்கீடுகள் வழியில் செல்ல வேண்டியதில்லை, அதாவது 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற வேண்டுமெனில் 12 சதவீத பொருளாதார வளர்ச்சி தேவை என்ற கணக்கீடுகளை நாம் பார்க்க வேண்டியதில்லை. இத்தகைய ஜிடிபி கணக்குகளைப் பார்க்க வேண்டாம். இத்தகைய கணிதங்கள் ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடிக்க உதவவில்லை" எனத் தெரிவித்தார்.

புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த ஐசக் நியூட்டன் என்று சொல்வதற்கு பதிலாக, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று பியூஷ் கோயல் கூறியதை சமூக ஊடங்களில் ஏராளமானோர் கிண்டல் செய்து ட்ரோல் செய்தார்கள்.

இந்நிலையி்ல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் ட்விட்டரில் பியூஷ் கோயல் பேசியதைக் குறிப்பிட்டும், ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிவுக்க மக்கள் ஓலா, உபர் வாகனத்தை நாடியதே காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை குறிப்பிட்டும் பேசியுள்ளார்.

பிரியங்கா காந்தி, ட்விட்டரில் கூறுகையில், " கிரிக்கெட்டில் நல்ல கேட்ச் பிடிக்க, பந்தின் மீது கவனமாக இருப்பது முக்கியம், விளையாட்டிலும் உண்மையான உற்சாகத்துடன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், புவியீர்ப்பு விசை, கணிதம், ஓலா-உபர் என்றுதான் குறை சொல்லுவோம். இந்திய பொருளாதாரத்தின் நலனுக்காக சொல்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கிரிக்கெட்டில் பவுண்டரி அருகே உயரமாகச் செல்லும் பந்தை கேட்ச்பிடிக்கும் வீடியோ ஒன்றையும் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x