Published : 13 Sep 2019 01:29 PM
Last Updated : 13 Sep 2019 01:29 PM

ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம்: டெல்லியில் நவ.4 முதல் 15 வரை மீண்டும் அமலாக்கம்

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் குறைக்க, வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மீண்டும் ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகன இயக்கத்தை அமலாக்கம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதன்முதலில் டெல்லியில் அமல்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக இது நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் டெல்லியில் காற்று மாசு கனிசமாகக் குறைந்திருப்பதாக டெல்லி அரசு ஏற்கெனவே கூறியிருந்தது.

இந்நிலையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான 7 அம்ச திட்டங்களை அவர் அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தலைநகர் டெல்லியில் மாசு கட்டுப்பாட்டைக் குறைக்க மீண்டும் வரும் நவம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஒற்றை, இரட்டை இலக்க பதிவு எண் அடிப்படையில் வாகனங்கள் இயக்கப்படும்.

இந்த ஆண்டு இந்த விதிமுறை தனியார் கார்களுக்கும், இருசக்கர வாகங்களுக்கும் அமல்படுத்தப்படுகிறது. பெண் வாகன ஓட்டிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. அதேபோல் வார இறுதி நாட்களிலும் கட்டுப்பாடு கிடையாது. இப்போதைக்கு 10 நாட்களுக்கு இந்த கெடுபிடி அமலில் இருக்கும். கெடுபிடி காலத்தை நீட்டினாலும் அது மக்களுக்கு அசவுகரியங்களை ஏற்படுத்தும் என்பதால் அது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

மேலும், காற்று மாசை கட்டுப்படுத்த சாலைகளை இயந்திரங்களைக் கொண்டு சுத்தப்படுத்துதல், மரம் நடுதல், நகரின் முக்கியமான 12 பகுதிகளுக்கென சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறோம்.

பல்வேறு ஆய்வுகளின்படி டெல்லிதான் உலகளவில் மிகவும் மாசடைந்த தலைநகரமாக இருக்கிறது. வாகனப் புகை, தொழிற்சாலை புகை, கட்டுமானப் பணியிட தூசு, குப்பைகள் மற்றும் பயிர்க்கழிவுகளை எரிப்பதனால் ஏற்படும் புகை என பல்வேறு வகையிலும் நகரம் மாசடைகிறது. இருந்தாலும் இத்தனையையும் மீறி டெல்லியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அண்மைக்கால ஆய்வின்படி டெல்லியில் 25% மாசு குறைந்திருக்கிறது. மக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" எனக் கூறினார்.

போக்குவரத்தில் முன்னேற்றம்..

தொடர்ந்து பேசிய முதல்வர், புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்த பின்னர் டெல்லியில் போக்குவரத்து ஒழுங்கில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அதேவேளையில், மோட்டார் வாகனச் சட்டத்தின் ஏதேனும் ஒரு பிரிவு மக்களுக்கு இடையூறு விளைவிக்குமானால் அதனை திருத்தம் செய்ய எங்களுக்கு அதிகாரம் இருந்தால் நிச்சயம் அதனை மேற்கொள்வோம் என்றார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் டெல்லியில்தான் முதன்முதலில் ஓர் இளைஞரிடம் ரூ.23,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில், அபராதத் தொகையைக் குறைக்க தங்களுக்கு அதிகாரம் இருந்தால் அதை உடனே குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கேஜ்ரிவால் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x