செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 10:57 am

Updated : : 11 Sep 2019 11:04 am

 

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை: ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்பு

jairam-ramesh-slams-proposed-ban-on-use-of-single-use-plastic

புதுடெல்லி,

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று ஒருமுறை பயன்படுத்தும் 6 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரே முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பை, டம்ளர், தட்டு, பாட்டில் ஸ்ட்ரா, சில வகையிலான சேசேக்களுக்குத் தடை வருகிறது.

இந்தத் தடை உற்பத்தி, பயன்பாடு, இறக்குமதி என எல்லா வகையிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பிளாஸ்டிக் நுகர்வு 5% வரை (சுமார் 14 மில்லியன் டன்) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சுற்றுச்சுழல் துறை அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாகத் தடை செய்யும் முடிவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். பிளாஸ்டிக் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி அழிப்பது அல்லது மறு சுழற்சி செய்வது என்பது தான் இப்போது நாம் சந்திக்கும் பிரச்சினை. இந்தத் தடை என்பது வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்கும். மோடி அரசு சுற்றுச்சூழல் சாதனை முகமூடியை அணிந்து இருக்கும்’’ எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘நாடு முழுவதும் பெரும் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வரும் சூழலில் பிளாஸ்டிக்கிற்குத் தடை விதிக்கும் மோடி அரசின் முடிவு மிகவும் மோசமான யோசனை’’ எனவும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

Jairam RameshSingle use plasticபிளாஸ்டிக்கிற்கு தடைஜெய்ராம் ரமேஷ்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author