Published : 09 Sep 2019 02:09 PM
Last Updated : 09 Sep 2019 02:09 PM

ஒரே முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உலகம் விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி

நொய்டா,

ஒரே முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருடளுக்கு உலகம் விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா.,வின் 14-வது மாநாடு (United Nations Convention to Combat Desertification) நொய்டாவில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

பாலைவனமாக்கலை எதிர்த்து குரல்கொடுக்கும் தேசங்கள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

காலநிலை மாறுபாடு மற்றும் பாலைவனமாக்கலை தடுக்க இந்தியா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இரண்டு ஆண்டு திட்டமாக மேற்கொள்ள இந்தியா ஆயத்தமாகும் சூழலில் பிரதமரின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, "ஒரே முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு உலகம் விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டது. காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்வது அவசியம்.

காலநிலை மாறுபாட்டால் கடல்மட்டம் உயர்வு, கடல் சீற்றம், பருவம் தவறிய மழை, புயல் ஆகியன ஏற்படுகின்றன.காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாம் எத்தனை திட்டங்களை வேண்டுமானால் வகுக்கலாம். ஆனால், மக்கள் களத்தில் இறங்கி வேலை செய்யும்போதுதான் உண்மையான மாற்றம் வரும். உலகத் தலைவர்கள் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்.

அதேபோல் தண்ணீர் தட்டுப்பாடு பற்றியும் பேச வேண்டும். தண்ணீர் பிரச்சினைக்கும், நில மாசுபாடு பிரச்சினைக்கும் முடிவு கட்ட இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அந்த நிலை வரும் என நம்புகிறேன்" என்றார்.

6 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை..

வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று 6 விதமான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரே முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பை, டம்ப்ளர், தட்டு, பாட்டில் ஸ்ட்ரா, சில வகையிலான சேசேக்களுக்கு தடை வருகிறது. இந்தத் தடை உற்பத்தி, பயன்பாடு, இறக்குமதி என எல்லா வகையிலும் நீள்கிறது. இதன்மூலம் இந்தியாவின் பிளாஸ்டிக் நுகர்வு 5% வரை (சுமார் 14 மில்லியன் டன்) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x