Published : 07 Sep 2019 07:48 AM
Last Updated : 07 Sep 2019 07:48 AM

போக்குவரத்து விதிமீறலுக்கு ரூ.25,000 அபராதம்; பைக்கை தீ வைத்து எரித்த இளைஞர்

புதுடெல்லி

டெல்லியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவருக்கு போலீஸார் ரூ.25,000 அபராதம் விதித்தனர். ஆத்திரமடைந்த அந்த இளைஞர், சாலையில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார்.

மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் 'ஸ்கூட்டி' இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவர் கூறும்போது, ‘‘எனது வாகனத்தின் மதிப்பு வெறும் ரூ.15 ஆயிரம். எனக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’’ என்று வேதனை தெரிவித்தார்.

டெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். போதையில் இருந்தது, ஹெல்மெட் அணியாதது, உரிய சான்றிதழ்கள் இல்லாதது என்ற வகையில் அவருக்கு போலீஸார் ரூ.25,000 அபராதம் விதித்தனர்.

ஆத்திரமடைந்த அந்த இளைஞர், பெட்ரோல் டேங்கை திறந்து தீ வைத்தார். சாலையோரம் மோட்டார் சைக்கிள் கொழுந்து
விட்டு எரிந்தது. சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

போலீஸ் அதிகாரிக்கு அபராதம்

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர், ஹெல்மெட் அணியாமல் மொபைல்போனில் பேசியபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார். இதை ஒருவர் மொபைல்போனில் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியதால் தவறிழைத்த போலீஸ் அதிகாரி சுஷாங்க் ஆனந்துக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் காரில் பயணம் செய்த போலீஸார் சீட் பெல்ட் அணியவில்லை. இதைப் பார்த்த பொதுமக்கள், காரை தடுத்து நிறுத்தி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸார் சீட் பெல்ட் அணிந்து கொண்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஒடிசாவில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக கடந்த 4 நாட்களில் ரூ.99 லட்சம் வசூலாகி உள்ளது. அந்த மாநிலத்தில் கடந்த புதன்கிழமை ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.47,000, மற்றொரு ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.27,500 அபராதமாக விதிக்கப்பட்டது. இதற்கு வாகனஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 4 நாட்களில் ஹரியாணாவில் ரூ.52.32 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் கணிசமாக வசூலாகி வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.டெல்லியில் போக்குவரத்து வீதிமீறலுக்காக ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர், தனது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x