Published : 06 Sep 2019 05:17 PM
Last Updated : 06 Sep 2019 05:17 PM

வயலுக்கு நீர் பாய்ச்சிவிட்டு அசதியில் தண்டவாளத்தில் தூங்கியதால் விபரீதம் : ரயில் மோதியதில் 2 விவசாயிகள் பலி

அமேதி (உபி)

நிலத்துக்கு நீர் பாய்ச்சிவிட்டு அசதியில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய விவசாயிகள் மீது ரயில் மோதியதில் 2 பேர் பலியான பரிதாப சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் இன்று காலை நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தரபிரதேசம் அமேதி மாவட்டத்தில் அமைந்துள்ள ஷிவ்ராதங்கஜ் பகுதியில் ஆங்கூரி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜய் ஷங்கர் ஷூக்லா (38) ராஜாராம் (38). இவர்களுக்கு சொந்தமான நிலம் ஆஷ்ராபூர் ரயில் நிலையம் அருகே உள்ளது. விவசாய வேலையில் ஈடுபடும் இவர்கள் இருவரும் வழக்கம்போல் தங்கள் பணியில் ஈடுபட்டனர். வயலுக்கு நீர்ப்பாய்ச்சும் பணிக்காக நேற்றிரவே வயலுக்கு வந்த இருவரும் நீர்ப்பாய்ச்சும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.

தூக்கமின்றி விடிய விடிய வேலையில் ஈடுபட்டிருந்த அவர்கள் அதிகாலையில் தங்கள் பணியை முடித்தனர். பின்னர் இருவரும் தங்கள் கிராமத்திற்கு செல்ல தயாரானார்கள். ரயில் தண்டவாளத்தை கடந்து ஊருக்குச் செல்லவேண்டிய நிலையில் இருவரும் கடும் அசதியில் இருந்ததால் ரயில் தண்டவாளத்திலேயே சாய்ந்து உறங்கத்தொடங்கினர்.

அந்தப்பகுதியில் ரயில் வராது என்கிற எண்ணத்தில் அவர்கள் உறங்கினர். அப்போது லக்னோ நோக்கிச் செல்லும் ரயில் அந்த தண்டவாளத்தில் வந்துள்ளது. தண்டவாளத்தில் இரண்டுபேர் படுத்துக்கிடப்பதைப் பார்த்த ரயில் ஓட்டுனர் பலத்த சத்தத்துடன் ஹாரன் அடித்துள்ளார். ஆனால் இரவு முழுவதும் உறங்காமல் மடைமாற்றி நீர்பாய்ச்சிக் கொண்டிருந்ததால் அசதியில் ரயில் வரும் சத்தம்கூட அவர்கள் காதில் விழவில்லை.

உறக்கத்தில் இருந்த அவர்கள் மீது ரயில் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி இருவரும் உயிரிழந்தனர். விவச்சயிகள் உயிரிழந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவம் பற்றி பக்கத்து ஒரு நிலத்தின் சொந்தக்காரர் ஒருவர் கூறுகையில்:

''அசதியில் இருந்த அவர்கள் சிறிதுநேரம் படுத்துவிட்டு பின்னர் சென்றுவிடலாம், ரயில் இப்போதைக்கு வராது நினைத்து என்று தண்டவாளத்தில் உறங்கியிருக்கலாம்'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஷிவ்ராதங்கஜ் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பாரத் உபாத்யாய் கூறுகையில், ''அவர்களின் வயல்களை ஒட்டித்தான் ரயில் பாதை செல்கிறது. அதனால் அவர்கள் தண்டவாளத்தில் வந்து ஓய்வெடுத்துள்ளனர். அவர்களை மீறி அசதியில் தூங்கிவிட்டதால் ரயில் வந்ததை அவர்கள் அறியவில்லை'' என்றார்.

உயிரிழந்த விவசாயிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x