Published : 05 Sep 2019 05:45 PM
Last Updated : 05 Sep 2019 05:45 PM

உலகிலேயே முதல்முறை: 74 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்

குண்டூர்

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் பகுதியில், 74 வயதுப் பெண் ஒருவர், இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு, சிசேரியன் மூலம் குழந்தைகளை வெளியே எடுத்துள்ளது.

இதுகுறித்து பிரசவம் நடைபெற்ற அகல்யா மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, ''தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர். இதுவொரு மருத்துவ அதிசயம்.

உலகிலேயே அதிக வயது கொண்ட பெண், குழந்தை பெற்றது மங்கயம்மாதான். 74 வயதான அவருக்கு திருமணமாகி 54 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை.

கடந்த ஆண்டு சிகிச்சை குறித்து ஆலோசனை பெற எங்களின் நர்சிங் ஹோமுக்கு வந்தனர். பல்வேறு சோதனைகள் மூலம் மங்காயம்மாவைப் பரிசோதித்ததில், அவரால் பிரசவிக்க முடியும் என்பது தெரிய வந்தது.

முறையான சிகிச்சைகளுக்குப் பிறகு ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தார். அவரின் உடல் நலன், ஊட்டச்சத்து, இதய நலன் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, 9 மாதங்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்தது. ஸ்கேன்களில் குழந்தைகள் பூரண உடல் நலத்துடன் இருந்தனர்.

இப்போது இரட்டைக் குழந்தைகளை மங்காயம்மா பெற்றெடுத்திருக்கிறார். இன்னும் சில நாட்கள் கவனிப்புக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பலாம்'' என்கின்றனர்.

74 வயதில் தாயான மங்காயம்மா, ''கடவுள் எங்களின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டார். இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்'' என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்ர்.

அவரின் கணவர் ராஜா ராய், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி, அந்த தருணத்தைக் கொண்டாடினார். முன்னதாக ஹரியாணாவைச் சேர்ந்த தல்ஜிந்தர் கவுர் என்னும் 70 வயதுப் பெண், 2016-ல் குழந்தை பெற்றது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x