Published : 04 Sep 2019 10:52 AM
Last Updated : 04 Sep 2019 10:52 AM

பாஜகவை பாராட்டி ட்வீட் செய்த டி.கே.சிவக்குமார்; விடுதலைக்கு வேண்டுவதாக சொல்லும் எடியூரப்பா

பெங்களூரு,

நிதிமுறைகேட்டு வழக்கு தொடர்பாக கர்நாடகாவின் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.

இந்நிலையில் டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக நண்பர்களுக்கு எனது பாராட்டு. இறுதியாக என்னை கைது செய்தே ஆகவேண்டும் என்ற இலக்கில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்.

எனக்கு எதிரான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வழக்குகள் எல்லாம் அரசியல் பின்புலம் கொண்டவை. நான் பாஜகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நான் இரையாகி உள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, "நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். டி.கே.சிவக்குமார் கைது எனக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியளிக்கவில்லை. அவர் விரைவில் வெளிவர வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன். என் வாழ்வில் நான் யாரையும் வெறுத்ததில்லை. ஆனால், சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டுமல்லவா?" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

டி.கே.சிவக்குமார் கைதுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் குமாரசாமியும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அடுத்தடுத்து கைதாகும் காங்கிரஸ் பிரமுகர்கள்..

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைரும், மத்திய பிரதேச மாநில முதல்வருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வரிசையில் கடைசியாக கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைதாகியுள்ளார். அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சிக்குள் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x