Published : 02 Sep 2019 12:07 PM
Last Updated : 02 Sep 2019 12:07 PM

அயோத்தி வழக்கு; முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞருக்கு சென்னை பேராசிரியர் மிரட்டல் : உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

புதுடெல்லி,

அயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் ராஜீவ் தவணுக்கு மிரட்டல்கள் வந்ததையடுத்து, அவர் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இந்த மனுவை தாக்கல் செய்த நிலையில் இதை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

அயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கில் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவண் ஆஜராகி வாதிட்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் இருந்து பேராசிரியர் என். சண்முகம் என்பவரிடம் இருந்து அயோத்தி வழக்கி்ல் ஆஜராகிவரும் ராஜீவ் தவணுக்கு வழக்கில் இருந்து விலகுமாறு கூறி கடந்த மாதம் 22-ம் தேதி மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதேபோல, சஞ்சய் கலால் பஜ்ரங்கி என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப்பில் மிரட்டல் செய்தியும் வந்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவண் நீதிமன்ற அவமதிப்பு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "அயோத்தி வழக்கில் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஆதரவாக வாதாடி வரும் தனக்கு சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் என். சண்முகம் என்பவரிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்தது. அதேபோல, வாட்ஸ் அப்பில் சஞ்சய் கலால் பஜ்ரங்கி என்பவரிடம் இருந்து மிரட்டல் வந்தது.

உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சார்பாக ஆஜராகி வாதாடிவரும் மூத்த வழக்கறிஞருக்கு எதிராக இதுபோன்ற மிரட்டல்கள் வருவது கிரிமினல் நடவடிக்கை. வழக்கறிஞரின் கடமையைச் செய்யவிடாமல் தடுப்பதாகும். இதுதொடர்பான கடிதத்தின் நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.

ஆதலால், இதை நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும். இந்த மனுத் தாக்கல் செய்யும் முன்பாக, அட்டர்னி ஜெனரலிடம் அனுமதி பெறவில்லை. அவர் உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி வழக்கு தொடர்பான விசாரணையில் இருக்கிறார் " எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்குமாறு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x