Published : 01 Sep 2019 07:22 PM
Last Updated : 01 Sep 2019 07:22 PM

கேரள ஆளுநராக ஆரிப் கான் நியமனம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று: அபிஷேக் மனு சிங்வி கருத்து

புதுடெல்லி,

கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டது முழுவதும் எதிர்பார்த்தமுடிவுதான். விரைவில் பாஜகவில் இருந்து வெகுமதி கிடைக்கும் என்று கூறியிருந்ததாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது அவரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர் ஆரிப் முகமது கான். உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் பெண் ஷா பானு வழக்கில் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தவிடாமல் அப்போதைய காங்கிரஸ் அரசு சட்டம் இயற்றியது.

தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஆதரித்து ஷா பானுவிற்கு இழப்பீடு அளிக்கும் வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டுவர அப்போதைய காங்கிரஸ் அரசு முயன்றது. ஆனால், முஸ்லிம் அமைப்புகள் அளித்த நெருக்கடி, முஸ்லிம்கள் நடத்திய போராட்டம் ஆகிவற்றால், நீதிமன்றத் தீர்ப்பு செல்லாமல் போகும் வகையில் முஸ்லிம் பெண்கள மணமுறிவு பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தது.

கடந்த 1985-ம் ஆண்டு இந்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடும் வாதம் நடந்தது. அப்போது இந்தச் சட்டத்துக்கு எதிராகப் பேசியவர் ஆரிப் முகமதுகான். அதுமட்டுமல்லாமல் அரசுக்கு எதிராகப் பேசி தனது, அமைச்சர் பதவியையும் ஆரிப் கான் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, கடைசியாக பாஜக ஆகிய கட்சிகளுக்கு மாறி ஆரிப் கான் 2007-ம் ஆண்டுக்குப் பின் எந்தக் கட்சியும் சாராமல் செயல்பட்டு வந்தார்.

அதேசமயம், முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்துக்காகவும், சீர்திருத்தம் செய்யவும் பல்வேறு கருத்துகளையும், நூல்களையும் எழுதினார். குறிப்பாக முத்தலாக்கை நீக்க வேண்டும் என வலியுறுத்தினார். மத்திய அரசு முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக சட்டத்தில் கூறியதையும் முகமது கான் வரவேற்றார்.

இந்நிலையில், கேரள ஆளுநராக இருந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவத்துக்குப் பதிலாக ஆரிப் முகமது கான் இன்று ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முகமது கான் நியமனம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அபிஷேக் மனு சிங்வி ட்விட்டரில் கூறுகையில், "கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆரிப் முகமது கானுக்கு வாழ்த்துகள். நான் முழுமையாக இந்த முடிவை எதிர்பார்த்தேன். ஆரிப் முகமது கானின் சமீபத்திய கருத்துகள், அறிக்கைகள் அனைத்தும், விரைவில் பாஜக சார்பில் மிகப்பெரிய வெகுமதியை அளிக்கப் போகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது. நீண்டகாலமாக காத்திருந்து பெறப்பட்ட விருதுதான்" எனத் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x