Published : 31 Aug 2019 03:17 PM
Last Updated : 31 Aug 2019 03:17 PM

வாராக் கடனை மீட்க வங்கிகள் இணைப்பு உதவாது: வங்கி ஊழியர் கூட்டமைப்பு கண்டனம்

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.ஹெச். வெங்கடாச்சலம் : கோப்புப்படம்

சென்னை,

மத்திய அரசு 10 வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்றும் முயற்சியால் ஒருபோதும் வாராக் கடனை மீட்க முடியாது என்று அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.ஹெச் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு 10 அரசு வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் வகையில் வங்கி இணைப்பை நேற்று அறிவித்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் கூறுகையில், " இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன், ஆந்திராவங்கி, கார்ப்ரேஷன்வங்கியும், கனரா வங்கியுடன் சின்டிகேட் வங்கியும், பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டெட் பேங் ஆப் இந்தியா வங்கியும் இணைக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

ஏற்கனவே இதேபோல் எஸ்பிஐ வங்கியுடன், மகிளா வங்கி இணைக்கப்பட்டபோது இருந்தே வங்கி ஊழியர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.ஹெச். வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு வங்கிகளை இணைக்கிறோம் என்ற முயற்சியில், வங்கிகளின் வாராக் கடனை மீட்கலாம் என்று நம்புகிறது. ஆனால், மிகப்பெரிய அளவில் இருக்கும் வாராக் கடனை இந்த நடவடிக்கையால் மீட்க முடியாது. உண்மையில் வங்கிகள்இணைப்பின் முக்கிய நோக்கம் கார்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதற்காகத்தான்.

கடந்த நிதியாண்டில் அரசு வங்கிகளின் ஈட்டிய ஒட்டுமொத்த லாபம் ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியாகும், வாராக்கடனால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.60 ஆயிரம் கோடியாகும்.

இந்த வங்கி இணைப்பு மூலம் எந்தவிதமான பலனும் கிடைக்காது. மாறாக, 5 துணை வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்த பின், வங்கியின் வாராக்கடன்தான் அதிகரித்துள்ளது.

நிரவ் மோடியின் மோசடியை கண்டுபிடிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி தவறிவிட்டது, அப்படியிருக்கும் வங்கிகள் எவ்வாறு மிகப்பெரியதாக மாற்றும் போது, எவ்வாறு சிறந்த கண்காணிப்பில் ஈடுபடமுடியும். இவ்வாறு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் வங்கி இணைப்பைக் கண்டித்து இன்று பிற்பகலில் சென்னையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். மேலும் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கறுப்பு பட்டை அணிந்து பணிக்கு வருவார்கள் என்றும் வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார்

முன்னதாக வெங்கடாச்சலம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " மத்திய அரசு வங்கிகளை இணைக்கும் முடிவு தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவாகும். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

10 வங்கிகளை 4 வங்கிகளாக இணைப்பதன் மூலம் 6 வங்கிகள் மூடப்படுகிறது என்பது தெளிவாகிறது. உண்மையில் 6 வங்களையும் உயிரோடு கொலை செய்வதற்கு சமம். இந்த 6 வங்கிகளும் நீண்டகாலமாக தங்களை வளர்த்துள்ளன. இப்போது இணைக்கப்படும் போது அந்த வங்கிகள் காணாமல் போய்விடும். வங்கிக்கிளைகளை மூடுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏராளமான வாடிக்கையாளர்கள் வேறு கிளைக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்படுவார்கள், இதனால் வங்கிச்சேவை கடுமையாக பாதிக்கப்படும்.

உலகளவில் 2008-ம் ஆண்டு மிகப்பெரிய மந்தநிலை வந்தபோது, இந்தியாவை காப்பாற்றியது இந்திய வங்கி முறைதான். அதற்கு முக்கியக் காரணம் பொதுத்துறை வங்கிகள்தான் என்பதை நினைவில் வைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x