Published : 30 Aug 2019 04:30 PM
Last Updated : 30 Aug 2019 04:30 PM

இடிக்கப்பட்ட தலித் மக்களின் வனக்கோயில்: புனரமைப்புக் குழுவினர் பிரியங்காவுடன் சந்திப்பு

புதுடெல்லி

புதுடெல்லியில் கடந்த ஆகஸ்ட் 10 இடிக்கப்பட்ட தலித் மக்களின் வனக் கோயிலான குரு ரவிதாஸ் கோயிலை மீண்டும் கட்டுவதற்கான புனரமைப்புக் குழு இன்று பிரியங்காவை சந்தித்தனர்.

கடந்த ஆகஸ்ட் 10 அன்று டெல்லி வளர்ச்சி ஆணையம் டெல்லியின் துக்ளாகாபாத்தில் அமைந்திருந்த தலித் மக்களின் வனக் கோயிலை உச்ச நீதிமன்ற உத்தரவின் ஆணைப்படி இடித்துத் தள்ளியது.

இடித்துத் தள்ளப்பட்ட இக்கோயில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆன்மிகக் கவிஞரான குரு ரவிதாஸ் நினைவாக 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயிலுக்கு நாட்டின் பல பலகுதிகளிலிருந்தும் தலித் மக்கள் வணங்கி வந்துள்ளனர்.

கோயில் இடித்துத் தள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் டெல்லி, சண்டிகர் ஆகிய நகரங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தின்போது தலித் மக்களின்மீது தடியடிப் பிரயோகம் செய்யப்பட்டதற்கு பிரியங்கா காந்தி அப்போது கண்டனம் தெரிவித்திருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) மீண்டும் ஒரு கோயிலை கட்டித்தரக் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை ஹரியானா காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் மற்றும் மற்றும் முன்னாள் ஹரியாணா அமைச்சர் பிரதீப் ஜெயின் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

இக்கோயிலை மீண்டும் கட்டுவதற்கு தலித் மக்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக புனரமைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை குரு ரவிதாஸ் மந்திர் புனரமைப்புக் குழுவினர் சந்தித்தனர். மீண்டும் கட்டப்பட உள்ள புதிய கோயிலின் மாதிரி வடிவமைப்பை அவரிடம் காட்டினர்.

அப்போது, ''தலித் மக்கள் வணங்கி வந்த குரு ரவிதாஸ் கோயில் மீண்டும் கட்டப்படுவதற்கான அனைத்துவிதமான ஆதரவையும் காங்கிரஸ் அளிக்கும்'' என்று கூறினார்.

அமித் ஷா உறுதி

சிரோன்மணி அகாலிதளக் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறுகையில்,''துக்ளகாபாத்தில் கோயில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் கோயிலை மீண்டும் கட்டித் தர விடுத்த வேண்டுகோளை ஏற்ற அமித்ஷா மத்திய அரசு இதுகுறித்து பரிசீலனை செய்யும் என்று எங்கள் கட்சிக்கு உறுதியளித்துள்ளார்'' என்றார்.

கோவில் இடிக்கப்பட்டதன் விளைவாக தலித் மக்களிடம் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக தலையிடுமாறு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த ஆகஸ்ட் 11 ம் தேதி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x