Published : 29 Aug 2019 01:46 PM
Last Updated : 29 Aug 2019 01:46 PM

பாக். கமாண்டோக்கள் ஊடுருவல்?- குஜாராத் கடற்பகுதிகளில் உச்சகட்டப் பாதுகாப்பும் கண்காணிப்பும்

கான்ட்லா,

கடலுக்கு அடியில் மூழ்கிச் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய பயிற்சி பெற்ற பாகிஸ்தான் கமாண்டோக்கள் குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதிக்குள் ஊடுருவி இருக்கலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், குஜராத் கடற்கரைப் பகுதி முழுவதும், துறைமுகங்களிலும் உச்சகட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை லடாக், ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிராக பதற்றமான சூழலை உருவாக்கும் பொருட்டு எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்தும், போர் விமானங்களையும் பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது.

இந்த சூழலில் குஜராத்தின் கட்ச் வளைகுடாவின் 'ஹரிமா நலா கிரீக்' பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு சிறிய மோட்டார் படகுகள் கேட்பாற்று நின்றிருந்ததை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். ஆனால் அந்தப் படகுகளில் ஆயுதங்கள் ஏதும் இல்லை. பாகிஸ்தான் படகு குறித்து விசாரிக்கையில்தான் பாகிஸ்தான் கமாண்டோக்கள் ஊடுருவியிருக்கக்கூடும் என்று உளவுத்துறை மூலம் தெரியவந்தது. .

இதுகுறித்து பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் உள்ள ஹராமி நல்லா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரு சிறிய மோட்டார் படகுகள் காணப்பட்டன. அதன் அருகே சென்றபோது அங்கு யாரும் இல்லை. படகிலும் எந்தவிதமான ஆயுதங்களும் இல்லை.

பாகிஸ்தான் ராணுவத்தில் கமாண்டோ பயிற்சி பெற்றவர்கள், நீருக்குள் மூழ்கி தாக்குதல் நடத்தும் பயிற்சி பெற்றவர்கள். அவர்கள் கட்ச் வளைகுடா பகுதிக்குள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். உளவுத்துறையின் தகவலும் இதையே தெரிவிக்கிறது. இதனையடுத்து கான்ட்லா துறைமுகம், அதானி துறைமுகம், முந்த்ரா துறைமுகம் ஆகியவற்றுக்கு உச்சகட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து தீனதயால் துறைமுகத்தின் கண்காணிப்பாளர் விடுத் அறிக்கையில், "கான்ட்லா துறைமுகத்துக்குள் நுழையும் கப்பல்கள் அனைத்தும் தீவிரமாக கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. துறைமுகம் முழுவதும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. துறைமுகத்தில் ஏதேனும் சந்தேகத்துக்கு உரிய வகையில் மனிதர்கள் நடமாட்டம் இருந்தால் கடலோரப் பாதுகாப்புப் படை, அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கான்ட்லா துறைமுகத்தைஒ பராமரித்து வரும் நெதர்லாந்தைச் சேர்ந்த வான் ஓர்டு நிறுவனத்தையும் உச்சகட்ட விழிப்புணர்விலும், கண்காணிப்பிலும் ஈடுபடுமாறு துறைமுகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதானி துறைமுகமும் இதேபோன்ற எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. அதில் " குஜாராத் துறைமுகத்துக்குள் வரும் அனைத்துக் கப்பல்களும் தீவிரக் காண்காணிப்புக்குள் கொண்டுவரப்படும். தேவையான அனைத்து ஆய்வுகளும் செய்யப்படும்" என்றும் தெரிவித்துள்ளது.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x