Published : 28 Aug 2019 02:52 PM
Last Updated : 28 Aug 2019 02:52 PM

குழந்தையை திருட வந்ததாக தவறாக கருதி பெண் தாக்கப்பட்ட சம்பவம்: மாயாவதி கவலை ட்வீட்

லக்னோ

உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகள் திருட்டு என்ற பெயரில் பெண்களை குறிவைத்து சில கும்பல்கள் தாக்கும் சம்பவங்கள் மிகுந்த வேதனையைத் தருவதாக மாயாவதி ட்விட்டரில் கவலை தெரிவித்துள்ளார்.

உபியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் தனது பேத்தியை அழைத்துக்கொண்டு கடைவீதிக்கு வந்துள்ளார். அவர் கையிலிருந்த குழந்தையைப் பார்த்தவர்கள் அவர் வேறு எங்கோ இருந்து குழந்தையை திருடி வந்ததாக சந்தேகம் அடைந்தனர்.

தங்கள் சந்தேகத்தை உறுமதிபடுத்திக்கொள்ளாமல் கும்பல் ஒன்று அந்தப் பெண்ணை கடுமையாக தாக்கியது. ஆனால் அக்குழந்தை அப்பெண்ணின் பேத்தி என்பது பின்னர் தெரியவந்தது. குழந்தை திருடியதாக தவறான புரிதலில் நடந்த இந்த சம்பவம் உபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில், இச்சம்பவம் குறித்து இன்று தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள உபியின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி அப்பாவி பெண்களை குறிவைத்து கும்பல்கள் தாக்கி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது பதிவில் மாயாவதி கூறியுள்ளதாவது:

உத்தரபிரதேசத்தில், அப்பாவி பெண்களை குறிவைத்து தாக்கிய சம்பவத்தில் புதிய கும்பல் கலாச்சாரம் ஒன்று உருவாகியுள்ளது.

குழந்தைத் திருட்டுக் குற்றச்சாட்டில் அப்பாவி பெண்கள்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். இது மக்கள் மத்தியில் நிலவும் தீவிரவாதம். இதுபோன்ற தவறான சம்பவங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவதற்கான கடுமையான சட்ட நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும்"

இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதேபோன்ற ஒரு சம்பவம் நேற்று இமாச்சலப் பிரதேசத்திலும் நடந்துள்ளது. 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குழந்தையை திருட வந்துள்ளதாக சந்தேக்கப்பட்டு தாக்கப்பட்டார். இதேபோன்ற இன்னொரு சம்பவம் இரண்டுநாட்களுக்கு முன் ஸ்ரீநகரிலும் நடந்துள்ளது.

குழந்தையைத் திருடியதாக சில பெண்களின் கும்பல் ஒன்று சேர்ந்துகொண்டு ஒரு பெண்ணை சரமாரியாக அடிக்கும் சம்பவம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x