Published : 02 Jul 2015 08:48 AM
Last Updated : 02 Jul 2015 08:48 AM

செல்பி வித் டாட்டர் கட்டுரையில் திக்விஜய்சிங், அமிர்தா புகைப்படம்: நியூயார்க் டைம்ஸ் தவறுதலாக வெளியிட்டது

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ‘செல்பி வித் டாட்டர்’ பிரச்சாரம் தொடர்பான செய்தியை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டிருந் தது. அந்த செய்தியுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் அவரது தோழியும் பிரபல பத்திரிகையாளருமான அமிர்தாவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத் தையும் தவறுதலாக வெளியிட் டுள்ளது.

இந்தப் புகைப்படம் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அமிர்தாவுடனான தனது தனிப்பட்ட உறவை ஒப்புக்கொண்ட திக்விஜய் சிங், விரைவில் தாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் அப்போது கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆண், பெண் விகிதாச்சாரம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, பெண் சிசுவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் தங்கள் மகளுடன் எடுத்த போட்டோவை ட்விட்டரில் ‘செல்பி வித் டாட்டர்’ என்ற ஹேஷ்டேக்கில் பகிரும் படி பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதன்படி, ஒருவர் திக்விஜய் சிங், அமிர்தா புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில் ‘ஓகே, டிக்கி (திக்விஜய்) ராஜா செல்பி வித் டாட்டர் என்பதை செல்பி வித் மகள் வயதில் உள்ள கேர்ள்பிரண்ட் என தவறாக புரிந்துகொண்டார்’ என பதிவிட்டுள்ளார்.

ஆனால், இந்த விமர்சனத்தை அந்தப் பத்திரிகை கவனிக்க வில்லை. வழக்கமாக மகளுடன் தந்தை எடுத்துக்கொண்ட பல்வேறு செல்பி புகைப்படங்களுடன் திக்விஜய் சிங், அமிர்தா புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளது.

அத்துடன் பெண் குழந்தைக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி முயற்சி எடுத்து வருவது குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் இதழின் இந்த கவனக்குறைவு குறித்து திக்விஜய் சிங்கும், அமிர்தாவும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x