Published : 27 Aug 2019 05:57 PM
Last Updated : 27 Aug 2019 05:57 PM

ஆழமான நிதி சிக்கலில் தேசம் : பொருளாதாரம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறது காங்கிரஸ்

புதுடெல்லி,

தேசம் அழ்ந்த நிதிச் சிக்கலில் சிக்கியுள்ள நிலையில், பொருளாதாரம் குறித்து மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது

ரிசர்வ் வங்கி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது தொடர்பான விவகாரம் இதற்கு முன் இருந்த ஆளுநர் உர்ஜித் படேலுக்கும், மத்திய அரசுக்கும் மோதலாக மாறியதால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ரிசர்வ் வங்கி உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கு குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பிமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையைச் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வாரியக் குழுவிடம் சமர்ப்பித்தது.

குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் ரூ.1,76,051 கோடியை மத்திய அரசுக்கு வழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி அளித்த உபரிநிதி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவையின் காங்கிரஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆனந்த் சர்மா இன்று அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேசம் ஆழமான நிதிச் சிக்கலில் சிக்கி , பொருளாதாரம் உருக்குலைந்து இருக்கிறது. வளர்ச்சி குறித்து குறிப்பிடும் அனைத்து குறியீடுகளும் குறைந்த நிலையில் இருக்கின்றன. தேசத்தின் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) தொடர்ந்து சரிந்து வருகிறது.

2018-19-ம்நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாக இருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் புள்ளிவிவரங்கள் வரும் 30-ம் தேதி வரவுள்ளது. அதில் 5.6 சதவீதமாகக் குறையும் என்று முன்மதிப்பிடப்படப்பட்டுள்ளது. அவ்வாறு 5.6 சதவீதமாக முதல் காலாண்டில் ஜிடிபி இருந்தால், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த வளர்ச்சியாகும்.

தொழில்துறை உற்பத்தி குறியீடு 2 சதவீதமாகவும், சிறுகுறுந்தொழில் உற்பத்திதுறை 1.2 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது.இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 4 சதவீதத்தை இழந்திருக்கிறது, ஆசியாவில் மிகமோசமாக சரிந்துவரும் கரன்சியாக இந்திய ரூபாய் இருக்கிறது. வேலையின்மை நிலவரத்தை எடுத்துக்கொண்டால் உண்மை நிலவரத்தில் 20 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது.

எந்த பொருளாதார வல்லுநரும் இதை ஆய்வு செய்ய முடியும். தொழில்துறை, ஆட்டோமொபைல் துறை உள்ளிட்ட பலதுறைகள் ஆபத்தில் இருக்கிறது. வங்கிகளில் மக்களுக்கு கடன் கிடைக்கவில்லை, இதனால் தேவை படிப்படியாக குறைந்து வருகிறது.

இப்போது நிலைமையை சமாளிக்க ரிசர்வ் வங்கியின் இருப்பு நிதியை, அதாவது உபரி நிதி மத்திய அரசுக்கு தரப்படுகிறது. எந்த ரிசர்வ் வங்கியும் எதிர்பாரா பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வைத்திருக்கும் இந்த பணத்தை மத்திய அரசுக்கு அளிக்காது. ஆனால், ரிசர்வ் வங்கி, பிமால் ஜலான் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் ரூ.1.76 லட்சத்தை அரசுக்கு அளிக்க இருக்கிறது.

இதற்கு முன் ஒருநேரத்தில் பேசிய பிமால் ஜலான், ரிசர்வ் வங்கியின் உபரிநிதியை மொத்தமாக வழங்காமல், 4 முதல் 5 ஆண்டுகளில் தவணைகளாகத் தரவேண்டும் என்று கூறினார். இப்போது மொத்தமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேசம் ஆழ்ந்த பொருளாதார மற்றும் நிதிச்சிக்கலில் இருப்பது உறுதியாகிறது.

மத்திய அரசு தவறான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டுக்கும், பொருளாதார ஆய்வு அறிக்கைக்கும் இடையே 1.7 லட்சம் கோடி வேறுபாடு இருக்கிறது.அதனால்தான் ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசு பெற்று, தேசத்தை பொருளாதார அவசரநிலைக்கு உந்தித்தள்ளுகிறது. இவை அனைத்தும் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டதால் வந்தது.

ஆதலால் தேசத்தின் பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது என்பது குறித்து இன்னும் ஒருவாரத்திற்குள் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” இவ்வாறு ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x