Published : 26 Aug 2019 06:00 PM
Last Updated : 26 Aug 2019 06:00 PM

காஷ்மீர் பிரச்சினையில் அம்பேத்கரின் நிலைப்பாடு என்ன என்பது தெரியாமல் பேசக்கூடாது: மாயாவதிக்கு டி.ராஜா பதில்

விஜயவாடா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ அம்பேத்கர் வரவேற்க வில்லை என்று சரியான புரிதல் இல்லாமல் மாயாவதி பேசுகிறார். அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகளைப் சரியாக படிக்காமல், டாக்டர் அம்பேத்கரை அரசியல் சர்ச்சையில் இழுக்கக் கூடாது என மாயாவதிக்கு டி.ராஜா அறிவுறுத்தியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை சில ட்வீட்களைப் பதிவு செய்திருந்தார். அதில் முன் அனுமதி பெறாமல் எதிர்க்கட்சியினர் காஷ்மீர் சென்றது மத்திய அரசும், காஷ்மீர் ஆளுநரும் அரசியல் செய்வதற்கான வாய்ப்பாகிவிட்டது அல்லவா? எதிர்க்கட்சித் தலைவர்கள் காஷ்மீருக்கு சென்றிருக்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சியினர் காஷ்மீர் செல்வதற்கு முன்னதாகவே அனுமதி வாங்கியிருக்க வேண்டும் என்று கருத்தை தெரிவித்திருந்தார்.

மாயாவதியின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது. மாயாவதியின் ட்விட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பதில் அளித்துள்ளார்.

இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரத்திற்கு வருகை தந்த டி.ராஜா ஏஎன்ஐயிடம் கூறியதாவது:

''காஷ்மீர் மக்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர். அவர்களை நாங்கள் ஒரு முக்கியமான காரணத்துடனும், உங்களோடு நாங்களும் இருக்கிறோம் என்ற செய்தியை அவர்களுக்கு தெரிவிக்கும் ஒரு சிறந்த நோக்கத்துடன்தான் அங்கு சென்றோம்,

இதைப் புரிந்துகொள்ளாமல் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார். மேடம் மாயாவதி அழுத்தத்தில் உள்ளார். அவருக்கு என்று ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அந்த நிலைப்பாட்டை அவர் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், பாதுகாத்துக்கொள்ளட்டும். அதற்காக ஸ்ரீநகருக்குச் சென்ற எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்கதான ஒரு வாய்ப்பாக அவர் இதை பயன்படுத்தக்கூடாது.

இதன் மூலம் பாஜகவும் எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்கான ஒரு வாய்ப்பை அவர் ஏற்படுத்தித் தந்துவிட்டார். பாஜகவுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது யார்? அதை செய்வது பிஎஸ்பி (பகுஜன் சமாஜ் கட்சி).

ஸ்ரீநகருக்கு மக்களைப் பார்க்கச் சென்ற காங்கிரஸ், இடது சாரி கட்சிகள், திமுக மற்றும் பல கட்சிகளை எல்லாம் கேள்வி கேட்க பாஜகவுக்கு ஒரு வாய்ப்பை பிஎஸ்பி ஏற்படுத்தி தந்திருக்கிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ அம்பேத்கர் வரவேற்க வில்லை என்று சரியான புரிதல் இல்லாமல் மாயாவதி பேசுகிறார். அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகளைப் சரியாக படிக்காமல், டாக்டர் அம்பேத்கரை அரசியல் சர்ச்சையில் இழுக்கக் கூடாது.

ஜம்மு காஷ்மீரில் தலைவர்கள் தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். அதைக் குறித்து அவர் பேச வேண்டும். அவர் பாஜகவை பாதுகாப்பது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும். இதைச் செய்யவா அம்பேத்கார் போராடினார்.

அம்பேத்கார் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து இந்துத்துவா சக்திகளையும் எதிர்த்துப் போராடினார். இதை மாயாவதி புரிந்துகொள்வதோடு மாயாவதியை தலித் மக்களின் பிரதிநிதி என நினைத்துக்கொண்டிருக்கும் மக்களிடமும் அவர் சொல்ல வேண்டும்.

இவ்வாறு சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x