Published : 22 Aug 2019 01:36 PM
Last Updated : 22 Aug 2019 01:36 PM

கோவில் இடிப்புக்கு எதிராக போராடிய மக்கள்மீது தடியடி : தலித் மக்களின் குரலை பாஜக அரசு நசுக்குவதா?- பிரியங்கா கண்டனம்

புதுடெல்லி

போராட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதன் மூலம் தலித் மக்களின் குரலை பாஜக அரசு அவமானப்படுத்தியுள்ளது, இதை சகித்துக்கொள்ள முடியாது என பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெல்லி அருகே துக்ளகாபாத்தின் வனப்பகுதியில் ரவிதாஸ் கோயில் அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கவிஞர் குரு ரவிதாஸ் நினைவாக, 15- ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது.

கோடிக்கணக்கான தலித் மக்கள் சென்று வணங்கிவந்த இந்த கோவில் அரசு நிலத்தில் அமைந்துள்ளதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோயிலை இடித்துத் தள்ள உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இக்கோயில் கடந்த 11-ம் தேதி இடித்துத் தள்ளப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சில தினங்களுக்கு முன் பஞ்சாப்பில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றதை அடுத்து நேற்று டெல்லி அருகே துக்ளாகாபாத்தின் கோயில் பகுதியில் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். இப்போராட்டம் நேற்று இரவும் நீடித்த நிலையில் போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றனர்.

போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அப்போது திடீரென வன்முறை வெடித்தது. இதில் போலீஸார் உட்பட பலரும் காயமடைந்தனர்.

போலீஸார் தடியடிப் பிரயோகம் செய்ததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது. எதிர்ப்பாளர்களை கலைக்க போலீஸ் படைகள் வரவழைக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட பீம் இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தங்கள் கலாச்சார பாரம்பரிய சின்னம் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலித் மக்கள் மீது தடியடிப் பிரயோகிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

"முதலில் பாஜக அரசு, ரவி தாஸ் கோயில் பற்றி தெளிவின்மையில் இருக்கிறது. கோடிக்கணக்கான தலித் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் வணங்கும் இக்கோயில் நமது கலாச்சார பாரம்பரியத்தின் சின்னம்.

தேசிய தலைநகரில் ஆயிரக்கணக்கான தலித் சகோதர சகோதரிகள் தங்கள் எதிர்ப்புக்குரலை உயர்த்தும்போது பாஜக தடியடிப் பிரயோகம் செய்துள்ளது; கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுகிறது. போராட்டக்காரர்களை கைது செய்கிறது.

போராட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதன் மூலம் தலித் மக்களின் குரலை பாஜக அரசு அவமானப்படுத்தியுள்ளது, இதை சகித்துக்கொள்ள முடியாது.''

இவ்வாறு பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கோவிலை இடிக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் அம்பேத்கர் பவனில் இருந்து ராம்லீலா மைதானத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். டெல்லிமாநில அரசைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் பேசுகையில்.

''மத்திய அரசின் உத்தரவின் பேரில் டெல்லி டெவலப்மென்ட் அத்தாரிடிதான் துக்ளகாபாத்தில் உள்ள ரவிதாஸ் கோயிலை இடித்தது. டிடிஏவின் இந்த நடவடிக்கை,தலித்துகள், புனித குரு ரவிதாஸ் பாந்திஸ் இன்றும் கூட தீண்டத்தகாதவர்கள் என்று பாஜக கருதுகிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது'' என்று தெரிவித்தார்.

குரு ரவிதாஸ் கோவில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் சில தினங்களுக்கு முன் மாபெரும் போராட்டமும் கடையடைப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x