Published : 21 Aug 2019 05:30 PM
Last Updated : 21 Aug 2019 05:30 PM

இலக்கு 2.2 கோடி: நடந்தது 3.78 கோடி: புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து பாஜக பெருமிதம்

புதுடெல்லி

பாஜக புதிதாக 2.2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயித்த நிலையில் 3.78 கோடி பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சி பெருமிதம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு கட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை பாஜக மேற்கொண்டுள்ளது. அந்த வகையில்
பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை ஜூலை 6-ம்தேதி தொடங்கியது. கட்சியின் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளான ஜூலை 6-ம் தேதி பிரதமர் மோடியும், கட்சித் தலைவர் அமித் ஷாவும் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தனர்.

பாஜகவில் 11 கோடி உறுப்பினர் இருந்தநிலையில் 20 சதவீதம் அதிகரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி புதிதாக 2.20 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க திட்டமிடப்பட்டது. பாஜக உறுப்பினர் சேர்க்கை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இலக்கை தாண்டி 3.78 கோடி பேர் புதிதாக அந்த கட்சியில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியின் துணைத் தலைவர் துஷ்யந்த் குமார் கெளதம் கூறியதாவது:

‘‘கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையை முடித்துள்ளோம். புதிதாக 2 கோடியே 20 லட்சம் பேரை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். ஆனால் இதுவரை 3.78 கோடி பேர் புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துள்ளனர். இது முதல்கட்ட தகவல் தான். அனைத்து மாநிலங்களில் இருந்து முழுமையான விவரங்கள் வந்த பிறகு புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தெரிகிறது. ஓரிரு நாளில் இறுதி விவரங்கள் வெளியிடப்படும். புதிய உறுப்பினர் சேர்க்கை எதிர்பார்த்ததை விடவும் மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x