Published : 20 Aug 2019 12:00 PM
Last Updated : 20 Aug 2019 12:00 PM

கணவன் - மனைவி இடையே விவாகரத்துக்குக் காரணமாக 'லட்டு': உ.பி.யில் வினோத வழக்கு

மீரட்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கணவன் - மனைவி இடையே விவாகரத்துக்கு லட்டு சாப்பிடுவதுதான் காரணம் என்ற வினோத சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மீரட் நகரைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டும் எனக் கோரி மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதற்கு அவர் கூறிய காரணம் வினோதமானதாகும்.

இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன், கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது அவரின் மனைவி, ஒரு மந்திரவாதியிடம் சென்று கணவரின் உடல்நிலை சரியாக ஆலோசனை கேட்டுள்ளார்.

அப்போது அவர் தினமும் கணவருக்கு காலையில் 4 லட்டுகளும், மாலையில் 4 லட்டுகளும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் எந்த உணவும் தரக்கூடாது என்று என மந்திரவாதி அறிவுரை கூறியுள்ளார்.

மந்திரவாதியின் ஆலோசனைப் படி கடந்த சில மாதங்களாக அந்தக் கணவருக்கு நாள்தோறும் காலை, மாலை என நாள்தோறும் மொத்தம் 8 லட்டுகளைச் சாப்பிட மனைவி வழங்கியுள்ளார். தினமும் லட்டுகளை மட்டும் சாப்பிட்டு வெறுத்துப்போன கணவர் தற்போது குடும்பநல நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்தக் கணவர் கூறுகையில், " எனக்கு கடந்த சில மாதங்களாக லட்டுகளைத் தவிர வேறு எதையும் எனது மனைவி சாப்பிட வழங்குவதில்லை. மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு காலையில் 4 லட்டுகள், மாலையில் 4 லட்டுகள் மட்டுமே சாப்பிடுகிறேன். இடைப்பட்ட நேரத்தில் எதுவும் சாப்பிடத் தருவதில்லை என் மனைவி. இனியும் என் மனைவியுடன் வாழ முடியாது. அதனால் விவகாரத்து கோரியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இந்த மனுவை ஆய்வு செய்த நீதிமன்ற குடும்பநல ஆலோசகர் முதல்கட்டமாக கணவன், மனைவிக்கும் கவுன்சிலிங் தர முடிவு செய்து கவுன்சிலிங் மையத்துக்கு அனுப்பியுள்ளார்.

இருவருக்கும் கவுன்சிலிங் அளிக்கும் ஆலோசகர் கூறுகையில், " கணவன் - மனைவி இருவரிடமும் பேசினோம். அந்தப் பெண் சில மூட நம்பிக்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுகிறார். லட்டு சாப்பிடுவதன் மூலம் தனது கணவரின் உடல்நிலை சரியாகும் என நம்பித்தான் தொடர்ந்து அதுபோன்று செய்துள்ளார். மற்றவற்றை ஏற்க மறுக்கிறார்" எனத் தெரிவித்தார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x