Published : 19 Aug 2019 03:19 PM
Last Updated : 19 Aug 2019 03:19 PM

இனிமேல் மளிகைக் கடையில் மது விற்பனை: ஜார்க்கண்ட் அரசு புதிய திட்டம்

பிரதிநிதித்துவப்படம்

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் பெரிய மளிகைக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி தர மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில கலால் வரித்துறை தயாரித்த திட்டத்துக்கு முதல்வர் ரகுபர் தாஸ் ஒப்புதல் அளிக்க முடிவு செய்தபோதிலும் சில கேள்விகளை எழுப்பி கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் மாநிலஅரசு தனது கலால் வரிக்கொள்கையை இருமுறை திருத்தியுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு கலால் வரிக்கொள்கை திருத்தத்தின்படி, அரசே சொந்தமாக மதுக்கடைகளைத் திறந்து மது விற்பனை செய்தது. ஆனால், இதில் போதுமான அளவு வருமானம் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மதுக்கடைகளைத் தனியாருக்கு ஏலத்தில் விற்பனை செய்ய திருத்தம் கொண்டு வந்தது.

இந்த இரு முயற்சிகளிலும் அரசுக்கு போதுமான வருவாய் கிடைக்கவில்லை. இதையடுத்து, தற்போது மளிகைக் கடைகளிலும் மதுபானத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு ரூ.1500 கோடி வருவாய ஈட்ட முடியும் என்று ஜார்க்கண்ட் அரசு நம்புகிறது

இந்தப் புதிய திட்டம் குறித்து கலால் வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், " மளிகைக் கடைகளில் மது விற்பனை செய்யும் இந்தத் திட்டத்தின்படி, மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் எந்த மளிகைக் கடையும், ரூ.30 லட்சம் வருவாய் உள்ள மளிகைக் கடையும் மது விற்பனை செய்துகொள்ள அரசு சார்பில் உரிமம் அளிக்கப்படும். இந்த வரைவுத் திட்டத்துக்கு முதல்வர் வாய்மொழியாக உத்தரவு அளித்துவிட்டாலும், சில விளக்கங்களைக் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பியுள்ளார். அதற்கு உரிய விளக்கத்தை நாங்கள் அளித்த பின், 2018 கலால்வரிக் கொள்கையில் திருத்தம் செய்யப்படும். இந்தத் திட்டத்தின்படி பஞ்சாயத்து அளவில் செயல்படும் மளிகைக் கடையில்கூட மது விற்பனை செய்ய முடியும்" எனத் தெரிவித்தன.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x