Published : 15 Aug 2019 01:02 PM
Last Updated : 15 Aug 2019 01:02 PM

முதல் முறையாக மக்கள்தொகைப் பெருக்கம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி

புதுடெல்லி

சமூகத்தின் ஒரு சிறிய பிரிவு, தங்களின் குடும்பங்களை சிறியதாகக் கட்டமைத்துக் கொள்கிறது. இதன் மூலம் சமூகத்தில் மரியாதையையும் அடைகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாட்டின் 73-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய மோடி, மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

டெல்லி, செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது அவர், "நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கம் வருங்காலத் தலைமுறையினருக்கு புதிய சவால்களை உருவாக்கும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கொள்கைகளை உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் தொடர்ந்து மக்கள்தொகை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. சமூகத்தின் ஒரு சிறிய பிரிவு, தங்களின் குடும்பங்களை சிறியதாகக் கட்டமைத்துக் கொள்கிறது. இதன்மூலம் சமூகத்தில் மரியாதையையும் அடைகிறது. அவர்களின் செயல் தேசப்பற்று மிகுந்தது.

இந்திய மக்கள்தொகை ஆரோக்கியமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும்பட்சத்தில், தேசமும் ஆரோக்கியமாகவும் அறிவார்ந்தும் இருக்கும்" என்று பேசினார் மோடி.

பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள், மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து ஏற்கெனவே குரல் எழுப்பியுள்ள போதிலும், இதுகுறித்து மோடி பேசுவது இதுவே முதல் முறை.

முன்னதாக, பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயே, "நாட்டில் மக்கள்தொகைப் பெருக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் விவசாய நிலப்பரப்பு மூன்றில் ஒருபகுதிதான். ஆனால், மக்கள்தொகைப் பெருக்கம் மூன்று மடங்கு அதிகரித்து வருகிறது.

குடிநீர் பற்றாக்குறை, வனஅழிப்பு, நிலச்சீர்கேடு, வீடுகள் இல்லாமல் வாழ்வது, ஏழ்மை, வேலையின்மை, பசி, ஊட்டச்சத்து குறைவு ஆகியவற்றுக்கு மக்கள்தொகைப் பெருக்கமே காரணம்" என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x