Published : 12 Aug 2019 04:02 PM
Last Updated : 12 Aug 2019 04:02 PM

அமித் ஷா வேண்டுமென்றே வெள்ளம் பாதித்த கேரளாவைப் பார்க்காமல் சென்றுவிட்டார்: சிபிஎம் குற்றச்சாட்டு

கேரளாவின் மல்லப்புரத்தில் சூழ்ந்துள்ள மழை வெள்ளம்.

புதுடெல்லி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுமென்றே வெள்ளம் பாதித்த கேரளாவைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக பாஜக ஆளும் மாநிலங்களை மட்டும் விமானம் மூலம் பார்வையிட்டதாக சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது.

மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் பேரிழப்புகளை அந்த மாநிலங்கள் சந்தித்து வருகின்றன.

சென்னையில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதன் பிறகு கர்நாடகா சென்றார். கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் அவர் பார்வையிட்டார். அதன் பின்பு மராட்டியத்தில் வெள்ளப் பாதிப்பையும் விமானத்தில் பறந்தபடியே பார்வையிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் கேரளாவை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து புதுடெல்லியில் இன்று சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

''நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மழை வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் தங்கள் உயிரையும் சொத்துகளையும் கால்நடைகளையும் இழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வான்வழி ஆய்வில், மோசமாக பாதிக்கப்பட்ட கேரளாவை ஆய்வு செய்யவில்லை. அவர் வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார். பாஜக ஆட்சி செய்த மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு மட்டுமே அவர் செல்ல முடிவு செய்ததாகத் தெரிகிறது.

கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நன்கொடைகளை யாரும் வழங்க வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ்-பாஜகவுடன் தொடர்புடைய சில சக்திகள் கேட்டுக்கொள்வதாகவும் சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மக்கள் துரதிர்ஷ்டவசமாக இறக்கும் காலங்களிலாவது அரசியல் பாகுபாடு இருக்க வேண்டாம் என்பதுதான் நமது எதிர்பார்ப்பு.

கேரளாவில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் காணாமல் போயுள்ளனர். மாநிலத்தில் 1,654 நிவாரண மையங்களில் 2,87,585 பேர் தஞ்சம் புகுந்துள்ளதாக இன்று காலை 11 மணிக்கு அதிகாரபூர்வ மேலதிகத் தகவல் தெரிவிக்கிறது.

மகாராஷ்டிராவில் 40 பேரும், கர்நாடகாவில் 32 பேரும், குஜராத்தில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். துங்கபத்ரா, ஆந்திர / தெலங்கானாவில் கிருஷ்ணா போன்ற முக்கிய நதிகள் அவற்றின் இடையே உள்ள துணை நதிகள் தொடர்ந்து பெரும் அழிவையும் சேதத்தையும் ஏற்படுத்துகின்றன. சிபிஎம்மின் மத்தியக் குழு இந்த பேரழிவைச் சமாளிக்க மாநில அரசுகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது.''

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x