Published : 12 Aug 2019 01:07 PM
Last Updated : 12 Aug 2019 01:07 PM

காஷ்மீர் மக்கள் சொந்த வீடுகளிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளனர்: யெச்சூரி குற்றச்சாட்டு 

சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி | கோப்புப் படம்

புதுடெல்லி

காஷ்மீரில் மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளதாக சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வாரம் திங்கள் அன்று, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாகவும் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதாகவும் அறிவிப்பு வெளியானது. முன்னதாக ஏராளமான ராணுவம் அங்கு குவிக்கப்பட்டது. காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டனர்.

இதை அடுத்து காஷ்மீரில் 144 அமல்படுத்தப்பட்டது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதி 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சில தினங்களுக்குப் பின் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதாகக் கூறப்பட்டது. ஈத் பண்டிகைக்காக மக்கள் தயாராகி வருவதையும் ஊடகங்கள் தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று காஷ்மீர் நிலவரத்தைப் பார்வையிட சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் யெச்சூரி மற்றும் சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகிய இருவரும் காஷ்மீர் செல்ல முயன்றபோது ஸ்ரீநகரிலேயே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

காஷ்மீருக்கு யாரும் செல்ல முடியாத நிலை உள்ளதால் அங்குள்ள தங்கள் கட்சியின் தோழர்களைக் கூட காண முடியவில்லை என்று யெச்சூரி இன்று கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

"ஈத் பண்டிகை என்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டம் மிக்க ஒரு தருணமாகும். ஆனால் காஷ்மீரில் மக்கள் தங்கள் சொந்த வீடுகளிலேயே சிறை வைக்கப்பட்டுள்ளதாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.

காஷ்மீரில் உள்ள எங்கள் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் எப்படி அல்லது எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய தகவலும் எங்களுக்கு இதுவரை தெரிந்துகொள்ள முடியாத நிலையே உள்ளது.''

இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x