Published : 11 Aug 2019 04:32 PM
Last Updated : 11 Aug 2019 04:32 PM

மகாராஷ்டிராவில் 761 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு;  4 லட்சம் பேர் வெளியேற்றம்; 31 பேர் பலி

மும்பை

மகாராஷ்டிராவின் வெள்ளம் பாதிப்புப் பகுதிகளில் இருந்து இதுவரை நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக் கிழமை) தெரிவித்தனர். வெள்ள பாதிப்பினால் மகாராஷ்டிராவில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேற்கு மகாராஷ்டிராவின் ஐந்து மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத மழை பெய்து வருகிறது. இதனால் இதுவரை சந்தித்திராத கடும் வெள்ள பாதிப்பு அங்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு மகாராஷ்டிராவில் வெள்ளப் பெருக்கின் காரணமாக அல்மாட்டி அணையிலிருந்து ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் சாங்க்லி மாவட்டத்தின் ப்ராம்னால் கிராமத்தில் ஏற்பட்ட படகு விபத்தில் 17 பேர் உயிரிழந்தது உள்ளிட்ட மழை தொடர்பான சம்பவங்களில் மட்டும் 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

படகு விபத்து

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:

கடந்த வியாழன் அன்று படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மற்றவர்கள் காணாமல் போயினர். இவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டது. எனினும் நேற்று மூன்று சடலங்களும் இன்று ஐந்து சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை
இதுவரை 17 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழையில் கோலாப்பூர், சாங்லி, சதாரா, தானே, புனே, நாசிக், பால்கர், ரத்னகிரி, ராய்காட் மற்றும் சிந்துதுர்க் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.

211 படகுகளுடன் மீட்புப் பணிகள்

மீட்புப் பணிகளைப் பற்றி மற்றொரு அதிகாரி பேசினார். அவர் கூறியதாவது:

மிக மோசமாக பாதிக்கப்பட்ட கோலாப்பூர் மற்றும் சாங்லி ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் சுமார் 3.78 லட்சம் பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது இப்பகுதிகளில் மழைநீர் வெள்ளத்தின் வேகம் குறையத் தொடங்கியுள்ளது.

கோலாப்பூரின் சாலைகளை இணைக்கும் இடங்களில் தொடர்ந்து நீர் சூழ்ந்திருப்பதால், ஹெலிகாப்டர்களிலிருந்து உணவுப் பொட்டலங்கள் கீழே நோக்கி போடப்பட்டன.

வெள்ள பாதிப்பு ஏற்படுள்ள 10 மாவட்டங்களிலும் மீட்புப் பணிகளில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) 29 குழுக்களும் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எஃப்) -3 குழுக்களும் ஈடுபட்டு வருகின்றன.

இது தவிர கடலோர காவல்படையைச் சேர்ந்த 16 பேர், கடற்படையைச் சேர்ந்த 41 பேர் மற்றும் ராணுவத்திலிருந்து 21 பேர் உதவிப்பணிகளிலும் மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் 211 படகுகளின் உதவியுடன் மக்களை மீட்டு வருகின்றனர்.

இந்த மாவட்டங்களில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்காக கிட்டத்தட்ட 369 தற்காலிக தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சாங்க்லி மற்றும் கோலாப்பூருக்குக் சென்று மருத்துவ உதவி வழங்குவதற்காக தானேவைச் சேர்ந்த 100 தனியார் மருத்துவர்கள் அடங்கிய குழு விரைவில் வரவுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருந்துகள் தவிர, உடுத்த ஆடைகளும் போர்வைகளும் அவர்கள் எடுத்துச் செல்வார்கள்'' என்றார்.

வெள்ளம், இருள்சூழ்ந்த 10 மாவட்டங்கள்

வெள்ளம் சூழ்ந்த 10 மாவட்டங்களிலும் மின்விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு இருள்சூழ்ந்து காணப்படுகின்றன. இதுகுறித்து மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

''கோலாப்பூர் மற்றும் சாங்லியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் மீட்டர்கள் சேதமடைந்துள்ளன. இவை இலவசமாக மாற்றித்தரப்படும் என்று மகாராஷ்டிரா மாநில மின் விநியோக நிறுவன (எம்.எஸ்.இ.டி.சி.எல்) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீடுகளில் உள்ள மின் மீட்டர்களில் தண்ணீர் நுழைந்தால் எந்த சாதனத்தையும் மாற்ற வேண்டாம் என்றும் நாங்கள் மக்களிடம் கேட்டுள்ளோம். மின்சாரம் வழங்கப்படுவதற்கு முன்னர் எம்.எஸ்.இ.டி.சி.எல் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் ஆய்வு செய்வார்கள்'' என்றார்.

மகாராஷ்டிராவில் வெள்ள நிலைமையை சீராக்க கர்நாடகாவின் அல்மட்டி அணையில் இருந்து சுமார் 5.3 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டதாகவும் கோயனா அணையில் இருந்து (சதாராவில்) 53,882 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டதாகவும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்துவருவதால் அங்கு இன்னும்
நீர் வரத்து தொடர்வதாகவும் கோலாப்பூரில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோலாப்பூரில் உள்ள அனைத்து அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்தது.

முதல்வர் நேரில் ஆய்வு

முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சனிக்கிழமை மீட்பு மற்றும் சாங்லியில் நிவாரண நடவடிக்கைகள். குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

அங்கு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பட்னவிஸ்.'' 2005ல் ஏற்பட்டதை வெள்ள பாதிப்பைப் போல இரண்டு மடங்கு அதிகமான வெள்ளத்தை மாநிலம் . இந்த பருவ மழையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் முன்னுதாரணம் சொல்லமுடியாத வெள்ளம் ஆகும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x