Last Updated : 16 Jul, 2015 07:09 PM

 

Published : 16 Jul 2015 07:09 PM
Last Updated : 16 Jul 2015 07:09 PM

ஒருங்கிணைந்த அந்நிய முதலீட்டுக் கொள்கை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மத்திய அரசு ஒருங்கிணைந்த அந்நிய முதலீட்டுக் கொள்கையை வெளியிட்டுள்ளது.

அந்நிய நேரடி முதலீடு (எப்டிஐ) மற்றும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்களுக்கான (எப்ஐஐ) வரம்பு உள்ளிட்டவை அடங்கிய ஒருங்கிணைந்த அந்நிய முதலீட்டுக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) மேற்கொள்ளும் முதலீடுகளுக்கும் இந்த கொள்கை பொருந்தும்.

இங்குள்ள நிறுவனங்களில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்வது எப்டிஐ எனப்படும். அதேபோல வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இங்குள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது எப்ஐஐ எனப்படும். இது தவிர வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) மேற்கொள்ளும் முதலீடுகளும் உண்டு. இப்போது இம்மூன்று முதலீடுகளும் ஒரே கொள்கையின் கீழ் வந்துள்ளன.

இதேபோல ஒருங்கிணைந்த முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனைகளும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக ஜேட்லி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவசாயம், உற்பத்தித் துறை, விமான நிலையங்கள் கட்டுமானம், ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்பு ஆகிய துறைகளுக்கும் ஒருங்கிணைந்த கொள்கைகளை கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

ஒருங்கிணைந்த முதலீட்டுக் கொள்கையிலிருந்து வங்கித் துறை மற்றும் ராணுவத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்விரு துறைகளிலும் ஏற்கெனவே உள்ள விதிமுறைகள்படிதான் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.

அதாவது வங்கித் துறையில் தற்போது 49 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறையில் 24 சதவீத அளவுக்கே அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. இதே நிலே இனியும் தொடரும்.

வியாழனன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தி்ல் மிக முக்கியமாக அந்நிய முதலீடுகளை ஒருமுகப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த முதலீட்டுக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜேட்லி கூறினார்.

அந்நிய நேரடி முதலீட்டாளர்களுக்கு (எப்பிஐ) விதிக்கப்படும் குறைந்தபட்ச மாற்று வரி (எம்ஏடி) தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.பி. ஷாவின் அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும் என்று அவர் கூறினார்.

மல்டி ஸ்டேட் பவர் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ரூ. 8,500 கோடி செலவிட அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக அவர் கூறினார். அத்துடன் மண்டல கிராமிய வங்கிகளுக்கு முதலீடாக ரூ. 700 கோடி அளிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் நாடு முழுவதும் 400 ரயில் நிலையங்களை மேம்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ஜேட்லி கூறினார். ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான டெண்டர் முறை ஸ்விட்சர்லாந்து முறையில் மேற்கொள்ளப்படும்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரணத்துக்காக இரண்டு கட்டமாக ரூ. 2,331 கோடி மற்றும் ரூ. 2,361 கோடி திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்டப்டுள்ளது.

வழக்கில் இல்லாத 295 சட்டங்களை முற்றிலுமாக நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிரத்துக்கு கூடுதலாக உணவு தானியம் ஒதுக்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

2014-15-ம் நிதி ஆண்டில் அந்நிய நிறுவன முதலீடு (எப்ஐஐ) 4,092 கோடியாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7 மடங்கு அதிகமாகும். இதேபோல அந்நிய நேரடி முதலீடு 27 சதவீதம் அதிகரித்து 3,093 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x