Published : 10 Aug 2019 05:30 PM
Last Updated : 10 Aug 2019 05:30 PM

மக்களவைத் தோல்விக்குப்பின் மே.வங்க இடைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்த மார்க்சிஸ்ட்

கொல்கத்தா,

மக்களவைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப்பின் மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி சேர்ந்துள்ளன.

மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் இரு கட்சிகளும் இணைய இருக்கின்றன.

கடந் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து போட்டியிட்டன. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது.

அதன்பின் மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் வகையில் இரு கட்சிகளும் கூட்டணிப் பேச்சில் ஈடுபட்டன. ஆனால், பேச்சுவார்ததையில் ஏற்பட்ட இழுபறி, புரிந்துணர்வின்மையால் கூட்டணி அமையவில்லை.

மக்களைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட இரு கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்தன. காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் மட்டும் வென்றது. கால்நூற்றாண்டாக மாநிலத்தில் ஆண்ட கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை மாறாக பாஜக 18 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 22 இடங்களிலும் வென்றன.

இந்த சூழலில் 2021-ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கீழே இறக்கி பாஜக ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் காய்களை நகர்த்தி வருகிறது.

இந்த சூழலில்தான் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மீண்டும் கூட்டணிக்காக கைகோர்க்கத் தயாராகியுள்ளன. களியாகஞ்ச், மேற்கு மிட்நாப்பூரில் உள்ள காரக்பூர், நாடியா மாவட்டத்தில் உள்ள கரிம்பூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்தான் கூட்டணி அமைக்கும் வகையில் இரு கட்சிகளும் பேசி வருகின்றன.

இதுதொடர்பாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா நிருபர்களிடம் கூறுகையில், " மேற்கு வங்கத்தில்விரைவில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்தினோம். இதில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், ஒரு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவது என ஒப்பந்தம் முடிவாகியது. இந்தகூட்டணி வங்காள அரசியலில் புதிய எழுச்சியைக் கொடுக்கும். திரிணமூல் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளின் வகுப்புவாத அரசியலை இந்த கூட்டணி முறியடிக்கும்" எனத் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x