Published : 07 Aug 2019 11:28 AM
Last Updated : 07 Aug 2019 11:28 AM

''சோனியா காந்தி பிரதமர் ஆகக்கூடாது''- வாழ்நாள் வரை எதிர்த்த சுஷ்மா ஸ்வராஜ்: பின்னணி என்ன?

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி பிரதமரானால், தன்னுடைய தலைமுடியை மழித்துக்கொண்டு, வெள்ளை ஆடை தரித்து விதவையாகவே வாழ்வேன் என்று மறைந்த சுஷ்மா ஸ்வராஜ் சவால்விட்டு வாழ்நாள் வரை சோனியாவை எதிர்த்தவர்.

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார். இந்நிலையில், நேற்றிரவு சுஷ்மாவுக்கு மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தனது வாழ்நாள் வரையில் பாஜகவின் கொள்கைகளில் தீவிரமான பற்றாளராக இருந்து வந்தார். இந்தியாவை இந்தியர்தான் ஆள வேண்டும் என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், கடந்த 2004-ம் ஆண்டு சோனியா காந்தி பிரதமராக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தபோது கடுமையாக எதிர்த்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆட்சிக் காலம் முடிந்தபின் 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அப்போது பிரதமராக யாரை நியமிக்கலாம் என்ற பேச்சு எழுந்தபோது, அனைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியைப் பிரதமராக முன்மொழிந்தனர். அப்போது இருந்த சூழலில் சோனியா காந்திக்கு பிரதமராக வருவதற்கான வாய்பபுகள் அதிகமாக இருந்தன.

இந்தத் தகவலை அறிந்த அப்போதைய மாநிலங்களவை பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சோனியா காந்தி பிரதமராக வருவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது சுஷ்மா ஸ்வராஜ் ஊடகங்களிடம் அளித்த பேட்டியில், " இந்தியாவை ஒரு வெளிநாட்டவர் (சோனியா காந்தி) எவ்வாறு ஆள்வதற்கு அனுமதிக்க முடியும். இது இந்தியர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அமையும். தேசத்தின் பிரதமராக சோனியா காந்தி வருவதை எதிர்க்கிறேன். ஒருவேளை அவரை இந்த தேசம் பிரதமராக ஆக்கினால், நான் என் தலைமுடியை மழித்து, வெள்ளைப் புடவை அணிந்து விதவையாக வாழ்வேன், வெறும் தரையில் படுத்து, வெறும் பயறுகளை மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்வேன்.

ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றுவதற்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் உயிர்த்தியாகம் செய்த நிலையில், நாட்டை ஆள்வதற்கு மீண்டும் வெளிநாட்டவரைத் தேர்வு செய்ய அனுமதிப்பது குடிமக்களின் உணர்வுகளை புண்படுத்துவதுபோலாகும்" எனத் தெரிவித்தார்.

சோனியா பிரதமராவதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, மன்மோகன் சிங்கை பிரதமராக சோனியா காந்தி நியமித்தார்.

சில ஆண்டுகள் கழித்து சுஷ்மா ஸ்வராஜிடம் நிருபர்கள் சோனியா காந்தி குறித்த பேச்சில் இப்போது அதே நிலைப்பாட்டில் இருக்கிறார்களா எனக் கேட்டனர். அதற்கு சுஷ்மா பதில் அளிக்கையில் " சோனியா காந்தி இப்போதும் பிரதமராக வந்தாலும் நான் எதிர்க்கத்தான் செய்வேன். எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த 1996-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் சுஷ்மா ஸ்வராஜ் களமிறங்கினார். அந்தத் தேர்தலில் சோனியாவிடம் தோல்வி அடைந்தார சுஷ்மா. அந்தத் தோல்வி குறித்து அவர் கூறுகையில், "60 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஒரு வெளிநாட்டவரை நாட்டின் தலைமைப் பதவிக்கு கொண்டுவந்தால், 100 கோடி மக்களும் கையாலாகாதவர்களாக ஆகிவிடுவார்கள். மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் செயலாகும். பெல்லாரி தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து வருத்தப்படவில்லை. போர்க்களத்தில் தோற்றுவிட்டேன், ஆனால் போரில் வென்றுவிட்டேன்" என ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x