Published : 06 Aug 2019 11:18 AM
Last Updated : 06 Aug 2019 11:18 AM

காஷ்மீர் பிரச்சினையில் கருத்து தெரிவித்த அஃப்ரிடி: பதிலடி கொடுத்த பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் 

காஷ்மீர் பிரச்சினையில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடிக்கு பாஜக எம்.பி. கவுதம் காம்பீர் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததோடு மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவும் நேற்று (திங்கள்கிழமை) மாநிலங்களவையில் நிறைவேறியது.

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் காட்டமாக ட்வீட் செய்ததோடு, ஐ.நா., அமெரிக்க அதிபரின் தலையீட்டையும் கோரியிதிருந்தார்.

இவர் பதிவு செய்திருந்த ட்வீட்டில், "ஐ.நா. தீர்மானத்தின் அடிப்படையில் காஷ்மீரிகளுக்கான உரிமைகளை வழங்க வேண்டும். நம் எல்லோருக்கும் இருப்பதுபோன்ற சுதந்திரம் காஷ்மீரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். ஐ.நா. நிறுவப்பட்டது ஏன்? இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஐ.நா. உறங்குகிறதா? திடீரென ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பும், காஷ்மீரில் மனிதத்துக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளும் முடிவுக்கு வரவேண்டும். இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் தலையிட வேண்டும் " எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு கிழக்கு டெல்லி பாஜக எம்.பி.யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீர், "ஆமாம் நீங்கள் சொல்வதுபோல் அங்கு ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. மனிதத்துக்கு எதிராகக் குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால், இவை எல்லாமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில்தான் நடக்கின்றன. வருந்தவேண்டாம் மகனே.. நாங்கள் அதை சரி செய்து விடுவோம்" எனப் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இதற்கு முன்னரும் அஃப்ரிடி காஷ்மீர் குறித்து ட்வீட் செய்து அதற்கு காம்பீர் பதிலடி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய அஃப்ரிடி, "பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் வேண்டாம், இந்தியாவுக்கும் காஷ்மீர் வேண்டாம். பாகிஸ்தானால் நான்கு மாநிலங்களையே சமாளிக்க முடியவில்லை.

அதேபோல அதை இந்தியாவுக்கு தர வேண்டாம். அந்த மாநிலத்தை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அவர்களுக்கு தேவைப்படுவது மனிதநேயம்தான். அந்த மக்கள் எதிர்பார்ப்பது மனிதநேயம்தான். மக்கள் நாள்தோறும் உயிரிழந்துவருவது வேதனையாக இருக்கிறது. இந்து, முஸ்ஸிம் என எந்தச் சமூகத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனைதான்" என்று தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x