Published : 05 Aug 2019 06:09 PM
Last Updated : 05 Aug 2019 06:09 PM

பிரதமர் மோடியின் 'மிஷன் காஷ்மீர்': மிகவும் ரகசியமான பணியை அமித் ஷா கச்சிதமாக முடித்தது எப்படி?

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்பு ரீதியாக பிரிவு 370-ன் கீழ் தற்காலிகமாக வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு இன்று ரத்து செய்து மிகப்பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் இனிமேல் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் ஜம்மு காஷ்மீரைக் கட்டுப்படுத்தும். மேலும், மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக்கை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் அதாவது சண்டிகர் போலும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும் இருக்கும். அதாவது புதுச்சேரி, டெல்லி போன்று ஜம்மு காஷ்மீர் செயல்படும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த 'மிஷன் காஷ்மீர்' எனச் சொல்லப்படும் 370 பிரிவை ரத்து செய்யும் நடவடிக்கையை பிரதமர் மோடி ஜூன் 3-வது வாரமே தொடங்கிவிட்டார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு புதிய தலைமைச் செயலாளராக 1987-ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பி.வி.ஆர். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டபோதே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த விஷயத்துக்கு திறமையான, நம்பகமான அதிகாரி வேண்டும் என்பதால், பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்த சுப்பிரமணியமைத் தேர்வு செய்து காஷ்மீருக்கு மத்திய அரசுஅனுப்பியது.

ஆனால், மிஷன் காஷ்மீரின் ஒட்டுமொத்தக் கடினமான இலக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ற ஒற்றை மனிதரிடமே ஒப்படைக்கப்பட்டது. அவர்தான் அனைத்துப் பணிகளையும் முன்னின்று திட்டமிட்டு நடத்தியுள்ளார்.

அமித் ஷாவுக்குத் துணையாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சட்ட ஆலோசனைகள் வழங்க தனிக்குழுவில் சட்டம் மற்றும் நீதித்துறை செயலாளர் அலோக் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் செயலாளர் ஆர்.எஸ். வர்மா, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கவுபா ஆகியோர் மிஷன் காஷ்மீருக்காகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியபோதே, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்திடமும், அவரின் உதவியாளரும் பொதுச்செயலாளருமான பையாஜி ஜோஷியிடமும் மிஷன் காஷ்மீர் குறித்து அமித் ஷா சுருக்கமாக விளக்கியுள்ளார். காஷ்மீருக்கான சிறப்புரிமை 370 பிரிவை நீக்குவது குறித்த மத்திய அரசின் முடிவு குறித்தும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்தும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

பல்வேறு கட்ட சட்ட ஆலோசனைகளுக்குப் பின், காஷ்மீர் மாநிலத்தில் அரசமைப்புச் சட்டம் 370 பிரிவை எவ்வாறு நீக்குவது, அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து ஆலோசித்துள்ளார். பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து இருமுறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் கலந்து பேசியுள்ளார் அமித் ஷா என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஜம்மு காஷ்மீருக்கு அமித் ஷா சென்று சூழலைக் கண்காணிக்கும்போது, தோவல் ஸ்ரீநகர் சென்று பாதுகாப்பு தொடர்பான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்தார்.

இதற்கிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அங்கு மூன்றுநாள் ஆய்வு செய்தபின்புதான் கடந்த 26-ம் தேதி அமர்நாத் யாத்திரையை முடித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்பின் என்எஸ்ஏ ஆலோசனையின்படி, அமர்நாத் சென்ற பக்தர்கள் அனைவரும் திரும்பிவரும்படியும், அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் முன்கூட்டியே 100 கம்பெனி மத்திய துணை ராணுவப்படையும், ஆயுதங்களுடன் காஷ்மீர் மாநிலத்துக்கு வரவழைக்கப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டது.

பிரதமர் அலுவலகத்துடனும், மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்துடனும் தொடர்பில் இருந்த ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் மாநிலத்தில் செய்யப்பட்டுள்ள பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ப்ளூ பிரிண்ட் அறிக்கையை அளித்துள்ளார்.

அதில்தான் செல்போன் இணைப்பு, இணையதளச் சேவையைத் துண்டிப்பது, போலீஸார், துணைராணுவப்படை, நிர்வாக அதிகாரிகள், ஆகியோருக்கு சாட்டிலைட் செல்போன் வழங்குவது, தெற்கு காஷ்மீரில் பதற்றமான பகுதிகளில் அதிகமான அளவு பாதுகாப்புப் படையினரைக் குவிப்பது மிகவும் பதற்றமான, எல்லை ஓரங்களில் ராணுவத்தை நிறுத்துவது என ஆலோசனை வழங்கப்பட்டது.

ராணுவத் தளபதி, உளவுத்துறை தலைவர், மத்திய துணை ராணுவப்படைகள் ஆகியோர் மத்திய உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளருடன் 24 மணிநேரமும் இணைந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டனர்.

ஆகஸ்ட் 4-ம் தேதி அதாவது நேற்று இரவு மிஷன் காஷ்மீரின் முக்கிய நடவடிக்கையைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங்கிற்கு தலைமைச் செயலாளர் பிறப்பித்த உத்தரவில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். மேலும், செல்போன், லேண்ட்லைன் தொலைபேசிகள் ஆகியவற்றை முடக்கி, 144 தடை உத்தரவைப் பிறப்பித்து மாநிலத்தில் கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்தனர்.

இதற்கு முன்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மற்றொரு முக்கியப் பணியும் இருந்தது. அதாவது மாநிலங்களவையில் இந்த தீர்மானத்தை அறிமுகம் செய்யும்போது அதை வெற்றி பெறவைக்க ஒரு குழுஅமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனில் பலூனி, பூபேந்திர யாதவ் தலைமையில் அமித் ஷா குழு அமைத்தார். இவர்கள் பாஜகவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை கிடைக்கும் வகையில், மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தினார்கள்.

குறிப்பாக தெலுங்குதேசம் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பிளவு ஏற்பட்ட நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் நீரஜ் சேகர், சுரேந்திர நாகர், சஞ்சய் சேத், காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள். இதில் சஞ்சய் சிங் சமீபத்தில்தான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
கடைசி நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.சதீஸ் மிஸ்ராவிடம் பேசி ஆதரவு கோரி அவரையும் சமாதானப்படுத்தினார்கள்.

இதற்கிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கியமான பத்திரிகையாளர்களுடன் மூடிய அறையில் தனது திட்டம் குறித்து விளக்கியுள்ளார். அப்போது செய்திகளை மிகவும் நடுநிலையுடனும் வெளியிடுமாறும், மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், நடுநிலை தவறாமல் செயல்படவும் கேட்டுக்கொண்டார். இந்த விஷயம் வெளியே தெரியாத வகையில் இருக்கும்படியும் கேட்டுக்கொண்ட அமித் ஷா இன்றுகாலை நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்தபோதுதான் அனைவருக்கும் தெரிந்தது.

இதற்கிடையே இந்த மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்யும்போது நிச்சயம் தனக்குப் போதுமான அளவு ஆதரவு கிடைக்கும் என்று அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கு ஏற்றார்போல் அனைத்து உறுப்பினர்களும் அவைக்குத் தவறாமல் பங்கேற்கவும், முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன என்றும் கட்சியின் கொறடாவும் உத்தரவு பிறப்பித்தார்.

பிரதமர் இல்லத்தில் இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் நடந்தபோதுதான் மிஷன் காஷ்மீர் திட்டம் குறித்தும், இன்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றுவது குறித்தும் தகவல் கசிந்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு ஏற்றார்போல் குடியரசுத் தலைவர் அறிவிக்கை வெளியிடும் வகையில் மத்திய சட்டத்துறை அமைச்சகமும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்தவுடன் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பாஜக எம்.பி.க்களிடம் வந்த வார்த்தை, "அமித் ஷாவின் மிஷன் ஒருபோதும் தோற்றதில்லை. அவர் புதிய சர்தார் வல்லபாய் படேல்" .

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x