Published : 05 Aug 2019 12:26 PM
Last Updated : 05 Aug 2019 12:26 PM

மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மும்பையில் அடுத்த சில நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு மும்பையில் வரலாறு காணாத அளவில் மழை பெய்தது. அதை நெருங்கும் வகையில் தற்போது மழை பெய்து வருகிறது. 

கனமழை காரணமாக மும்பையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மும்பையில் அடுத்த சில நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று (திங்கள்கிழமை) காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், "மும்பை நகரில் இன்று மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தானே, பால்காட், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலில் 4.65 மீட்டர் உயரத்துக்கு ராட்சத அலைகள் எழ வாய்ப்பிருக்கிறது. வடக்கு மற்றும் தென்மேற்கு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மும்பை, தானே, நாவி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக, கல்யாண் ரயில் நிலையத்துக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

நாசிக்கின் பிரபல த்ரிம்பகேஸ்வர் கோயில் வெள்ளத்தில் மூழ்கியது. ராய்கட் மாவட்டத்திலுள்ள சோன்யாச்சி வாடி கிராமத்திலிருந்து 60 பேரை மீட்புக்குழு படகுகள் மூலம் மீட்டுள்ளது. கனமழையால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் முடங்கியுள்ளது.

இன்று நடைபெறுவதாக இருந்த மும்பை திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நகரெங்கும் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் வேலைக்குத் தாமதாக வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x