Published : 05 Aug 2019 11:00 AM
Last Updated : 05 Aug 2019 11:00 AM

காஷ்மீர் நிலவரம்: பிரதமர் மோடியின் இல்லத்தில் அவசர மத்திய அமைச்சரவைக் கூட்டம்

பிரதமர் மோடியின் இல்லத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அமைச்சர்கள் : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி,

காஷ்மீரில் நிலவிவரும் பாதுகாப்பு சூழல் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று காலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் எனும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பக்தர்கள் அனைவரையும் மலையில் இருந்து கீழே உடனடியாக இறங்கி, சொந்த மாநிலங்களுக்குப் புறப்பட மாநில அரசு உத்தரவிட்டது. கடந்த வாரத்தில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் காஷ்மீருக்கு வரவழைக்கப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர். அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டும், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் போடப்பட்டு பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். 

மத்திய பாதுகாப்புத் துறையின் அமைச்சரவைக் கூட்டம், அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஆகியவை தனித்தனியாக நடந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கமாக புதன்கிழமையில்தான் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும். ஆனால், திங்கள்கிழமை நடந்ததற்கான விளக்கம் குறித்து தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 

ஆனால், ஜம்மு காஷ்மீர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கவ அமைச்சரவைக் கூட்டம் கூடியது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

இதற்கிடையே இன்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x