Published : 04 Aug 2019 02:58 PM
Last Updated : 04 Aug 2019 02:58 PM

இப்படித்தான் இருக்குமா பூமி? சந்திரயான்-2 முதல்முறையாக எடுத்து அனுப்பிய புகைப்படங்கள்: வெளியிட்டது இஸ்ரோ

புதுடெல்லி, 

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லாண்டர் பூமிக் கோளை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

நிலவின் தென் துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்தது இல்லை. இதை ஆய்வு செய்வதற்காக  சந்திரயான்-2 எனும் விண்கலத்தை தயாரித்து கடந்த மாதம் 22-ம் தேதி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. 

சந்திரயான்-2 விண்கலம் மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் அனைத்தும் நவீன தொழில் நுட்பங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை. ரூ.374 கோடியில் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3, ஐந்தாம் தலைமுறை ராக்கெட்டாகும். இதன் எடை 6 ஆயிரத்து 400 கிலோ. இதன் உயரம் மிகக் குறைவாக 43.43 மீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்களிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது. மார்க்-3 ராக்கெட்டில் மொத்தம் 3 நிலைகள் உள்ளன. இதன் இறுதி நிலையான கிரையோஜெனிக் இன்ஜின் முழுவதும் நம் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. 
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை சந்திரயான் விண்கலம் 48 நாட்களில் சென்றடையும்..

சந்திரயான்-2 விண்கலத்தில் 3 பிரிவுகள் இருக்கின்றன. 2,379 கிலோ எடை கொண்ட ஆர்பிட்டர் பகுதி, சந்திரனில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் எனும் பகுதி இது 1,471 கிலோ எடை கொண்டது, அதன்பின் நிலவின் தென்துருவத்தில் இறங்கி சுற்றிவரும் ரோவர் பிரக்யான் 27 கிலோ எடை கொண்டதாகும் என்பது கவனிக்கத்தக்கது.

திட்டமிட்டபடி சந்திரயான்-2 விண்கலம் வரும் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி நிலவைச் சென்றடையும். அதன்பின் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டர் கருவி விக்ரம் நிலவில் தரையிறங்கி ரோவர் கருவி பிரக்யான் ஆய்வு செய்யும். 


இந்நிலையில் சந்திரயான் விண்கலம் கடந்த 22-ம் தேதியில் இருந்து பூமியின் ஒவ்வொரு சுற்றுவட்டப்பாதைக்கும் உயர்த்தப்பட்டு 3-வது சுற்றுப்பாதைக்கு முடித்திருந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.42 மணிக்கு 4-வது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது. வரும் 6-ம் தேதி பிற்பகல் 2.30 மணிமுதல் 3.30 மணிக்குள் 5-வது சுற்றுவட்டப்பாதைக்கு சந்திரயான் விண்கலம் உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனிடையே, சந்திரயான் விண்கலத்தில் உள்ள விம்ரம்லேண்டரின் எல்ஐ4 எனும் கேமரா பூமியை துல்லியமாகப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. 

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், " சந்திரயான் விண்கலத்தில் உள்ள விக்ரம்லான்டர் கருவியில் இருக்கும் எல்ஐ4 எனும் துல்லியமான கேமரா மூலம் பூமியை பல்வேறு கோணங்களில், தொலைவுகளில் புகைப்படம் எடுத்து சந்திரயான்-2 அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்கள் நேற்று (சனிக்கிழமை) மாலை 5.28 மணி 5.29, 5.32, 5.34, ஆகிய நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேல் 2,450 கிமீ, 3200 கிமீ, 4,100 கிமீ, 4,700கிமீ, 5000 கிமீ ஆகிய பல்வேறு உயரங்களில் இருந்து இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x