Published : 03 Aug 2019 02:15 PM
Last Updated : 03 Aug 2019 02:15 PM

வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை மற்றும் புறநகர் பகுதிகள்: அடுத்த 2 நாட்களுக்கு ரெட்அலர்ட் ஐஎம்டி எச்சரிக்கை

மும்பை,
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவுமுதல் இடைவிடாது பெய்துவரும் மிகக் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

அடுத்து 48 மணி நேரத்துக்கு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக,மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக மும்பையில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 

கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்கள் பெய்த மழையால் மும்பை நகரம், புறநகர் பகுதிகள்  வெள்ளத்தில் மிதந்தன. இந்நிலையில் நேற்று இரவு முதல் மீண்டும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. 

மும்பை, நவிமும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னரி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடைவிடாது பெய்துவரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். 

புறநகர் செல்லும் ரயில்வே இருப்புப்பாதைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், ரயில்கள் அனைத்தும் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. ஆனால், விமானப்  போக்குவரத்தில் எந்தவிதமான இடையூறும் ஏற்படவில்லை என மும்பை விமானநிலைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே இந்திய வானிலை மையம் வெளியி்ட்ட எச்சரிக்கை அறிவிப்பில், " அடுத்த 48 மணி நேரத்தில் மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, ரெட் அலர்ட் விடுத்துள்ளோம். குறிப்பாக ரத்னகிரி மற்றும் சிந்துதுர்கா மாவட்டங்களில் மிக,கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. 

மேற்குக் கடற்கரைப்பகுதிகளில் வானிலை மோசமாக இருப்பதால், அடுத்த இரு நாட்களுக்கு கனமழை பெய்யும். வங்கக்கடலின் வடகிழக்குப்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மிகக்கனமழை பெய்யும். ஆதலால், மக்கள் தகுந்தப் பாதுகாப்புடன் வீடுகளில் இருக்க வேண்டும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மும்பை போலீஸாரும் மக்களுக்கு  ட்விட்டரில் எச்சரிக்கை வெளியி்ட்டுள்ளனர். அதில் " இந்திய வானிலை அறிவிப்பின்படி, அடுத்த 4 முதல் 6 மணி நேரத்துக்கு மும்பையில் மிக கனமழை பெய்யும்.அடுத்த 24 மணி நேரத்துக்கு மிகக்கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவசர உதவிக்கு 100 எண், 1916 எண் தொடர்பு கொள்ளலாம் " எனத் தெரிவிக்ககப்பட்டுள்ளது.

தானே மாவட்டத்தில் நேற்று இரவுமுதல் பெய்து வரும் மழைக்கு ஒருவர் பலியாகியுள்ளார். தானே நகரில் தரம்வீர்  பகுதியைச் சேர்ந்தவர் வீட்டில் ஃப்ரிட்ஜ் பிளக்கை கழற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மும்ப்ரா பகுதியில் பேக்கரி கடை ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததால், அதில் தங்கி இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

தானே, பால்கர், நவி மும்பை ஆகியபுறநகர் பகுதிகளில் இடைவிடாது மழைபெய்து வருவதால் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாநகராட்சிஅதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும், அடுத்த இரு நாட்களுக்கு கனமழை இருப்பாதல்,  பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளே தங்கி இருக்குமாறு மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x