Published : 02 Aug 2019 08:17 PM
Last Updated : 02 Aug 2019 08:17 PM

தூத்துக்குடி துப்பாக்கி சூடு, 'தமிழகத்தின் நவீனகால ஜாலியன்வாலா பாக்’ –மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் சாடல்

புதுடெல்லி: தூத்துக்குடியின் ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கி சூடு, ’தமிழகத்தின் ஜாலியன்வாலா பாக்’ என மக்களவையில் திமுக எம்.பி சாடினார். காங்கிரஸ் நிர்வாகிகளை நீகுவது தொடர்பான மசோதாவில் இன்று பேசும்போது இதை அவர் தெரிவித்தார்.

இது குறித்து தர்மபுரி தொகுதி எம்.பியான டாக்டர்.எஸ்.செந்தில்குமார் பேசுகையில், ’தமிழ்நாட்டில் நவீனகால ஜாலியன்வாலா பாக் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

ஆனால், ஆங்கிலேய நாடாளுமன்றத்தில் ஜெனரல் டயர் மீது கேள்வி எழுப்பப்பட்டது. அவர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற வேண்டியதாயிற்று. ஆனால், இங்கே யாருமே பொறுப்பு ஏற்கவில்லை.

இந்த சம்பவத்திற்கு அதிமுக அரசு பொறுப்பு ஏற்கவில்லை. ஆங்கிலேயர்கள் நிகழ்த்திய சம்பவத்தில் ஒரு பெண் கூட இறக்கவில்லை. ஆனால் இங்கே 17 வயது ஸ்னோலின் என்ற பெண் வாயில் சுடப்பட்டு இறந்தார்.

இதன் மீது இதுவரையும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த மக்களை கொலை செய்ய துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளித்தது யார்? இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து ஜாலியன்வாலா சட்டதிருத்த மசோதா பற்றியும் குறிப்பிட்ட செந்தில்குமார், மத்திய அரசை கடும் விமர்சனம் செய்தார்.

இது குறித்து செந்தில்குமார் கூறுகையில், ‘அவை நீட்டிக்கப்பட்டிருப்பதே முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றவே.

ஜாலியன்வாலாவின் சட்டத்திருத்தம் என்ன? இந்திய தேசிய காங்கிரஸில் அறங்காவலர்களை நீக்கவேண்டும்.

இது மிகவும் முக்கியம்தானா? இதற்காகத்தான் நாம் அவையை நீட்டிக்கின்றோமா? மக்கள் அரசாங்கத்தை எதைவைத்து மதிப்பிடுவார்கள்? இன்று உங்களுக்கு பெரும்பான்மை இருக்கின்றது.

ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில் 400 உறுப்பினர்களுக்கும் மேலாக பெரும்பான்மையோடு இருந்ததை பார்த்திருக்கின்றோம். மக்கள் உங்களின் பெருந்தன்மையை கொண்டு மதிப்பிடுவார்கள்.

காங்கிரஸ் கொண்டுவந்ததை மாற்றுவது தான் உங்கள் பெருந்தன்மையா? அரசாங்கம் எவ்வாறு செயல்படுகின்றது. அடித்தட்டு மக்களுக்கு என்ன செய்கின்றீர்கள், ஏழைகளுக்கு என்ன செய்கின்றீர்கள், குழந்தைகளுக்கும், பெண்களுக்கான அதிகாரத்துக்கு என்ன செய்கின்றீர்கள் போன்றவற்றை வைத்து அரசாங்கத்தின் பெருந்தன்மையை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை. நாங்கள் திராவிடத்தை தூக்கிப்பிடிப்பவர்கள். எங்களுடைய உரிமைகளை எப்போதும் உயர்த்தி பிடிப்பவர்கள்.’ எனத் தெரிவித்தார்.

கலைஞர் கருணாநிதிக்கு பாரதரத்னா

இந்த சந்தர்ப்பத்தில் திமுக உறுப்பினரான செந்தில்குமார் தம் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது குறித்து முதன்முறை எம்.பியான செந்தில்குமார் கூறும்போது, ‘எங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு பாரதரத்னா வழங்கி, நாடாளுமன்றத்தில் சிலை வைக்க வேண்டும் என்றும் இந்த அவையில் கோரிக்கையாக முன்வைக்கின்றேன்.

பெரியாரை பற்றி யுனெஸ்கோ கூறியவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன். ’புதிய காலத்தின் தூதர், சமூகசீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடப்பழக்கம் மற்றும் அர்த்தமில்லாத பழக்கத்தின் எதிரி’ என்று கூறியுள்ளது.

இதுபோன்ற மேற்கோள்கள்கள் தந்தை பெரியாருக்கும் நம் நாட்டில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.’ எனத் தெரிவித்தார்

-ஆர்.ஷபிமுன்னா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x