Published : 02 Aug 2019 09:54 AM
Last Updated : 02 Aug 2019 09:54 AM

போக்சோ சட்டத்தில் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

கோப்புப் படம்

ஆர்.ஷபிமுன்னா

போக்சோ சட்டத்தில் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என இன்று மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி வலியுறுத்தினார்.

பாலியல் குற்றங்ககளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டதிருத்த மசோதாவை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார்.  

இந்த சட்ட திருத்த மசோதாவின் மீதான விவாதம் நாடாளுமன்ற மக்களவையில் நடந்தபோது திமுக சார்பில் கனிமொழி கலந்துகொண்டு பேசினார். தூத்துக்குடி தொகுதி எம்.பியான கனிமொழி தனது உரையில் பேசியதாவது:

இந்த மசோதாவை  கொண்டுவந்ததற்காக நான்  மத்திய அமைச்சரை பாராட்டுகிறேன். இந்த சட்டத்திருத்ததில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பாலியல் ரீதியாக கொடுமைக்குள்ளாகும் குழந்தைகளை பாலியல்  ரீதியாக வேறுபடுத்திப் பார்ப்பதை அகற்றியிருக்கிறார்.  

பெண் குழந்தைகள் மட்டுமே பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று பொதுவாக நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். இது உண்மைக்கு வெகு தூரமானது.  பாலியல் வன்முறையால் பற்பல ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். 

பாலியல் குற்றங்களில் குற்றவாளிகள் பெரும்பாலும் ஆண்கள்தான் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதுவும் உண்மையல்ல. இந்த மசோதாவில் பாலின பேதத்தைக் களைந்தமைக்காக அமைச்சரைப் பாராட்டுகிறேன்.

மேலும் இந்த சட்டத்துக்குள் ஆபாசப் படங்கள், குழந்தைகளின் ஆபாசப் படங்களையும் உட்படுத்தியிருக்கிறார் அமைச்சர். இவற்றோடு குழந்தைகளை விபச்சாரத்துக்கு  உட்படுத்தும் கொடுமையையும் போக்சோ சட்டத்துக்குள் கொண்டுவரவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். 

இந்த மசோதாவிலோ, அல்லது இன்னொரு மசோதாவிலோ குழந்தைகளை விபச்சாரத்துக்கு உட்படுத்தும் கொடுமையை உட்படுத்தி தடுக்க வேண்டும் என்று  கருதுகிறேன். ஏனெனில் பல பெண் குழந்தைகள் விபச்சாரத்துக்கு உட்படுத்தப்பட்டு வன்முறைக்கு இரையாக்கப்படுகிறார்கள். 

காஷ்மீரில் கத்துவா பகுதியில் ஒரு சிறுமி கோயிலுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அநீதி நடந்தது. இது பலரையும் கடுமையாக பாதித்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்கவும் இந்த மசோதா வழிவகை செய்யவேண்டும். 

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை தூக்கிலிட வேண்டும் என்று பலர்  உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்கள். ஆனால் சட்டம் என்பது நீதியையும், குற்றவாளிகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இயற்றப்பட வேண்டும். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலாகவும் சட்டங்கள் அமைய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான பாலியல் குற்றங்கள்  அது பெண்களுக்கு எதிரான குற்றங்களானாலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களானாலும் பெரும்பாலும் பதிவாவதில்லை.  

பல ஆய்வுகளும் இதை வெளிப்படுத்துகின்றன. தேசிய குற்றப்பதிவு ஆவணம் 2016-ன்படி 94.5 சதவிகித பாலியல் குற்றங்கள் குழந்தைகள் அல்லது பெண்களின் நெருங்கிய உறவினர்களாலும், காப்பாளர்களாலுமே நடத்தப்படுகின்றன என்கிறது. 

இந்தக் குற்றங்களெல்லாம் புகார்களாக பதிவாவதே இல்லை. இதற்குக் காரணம் நமது குடும்ப அமைப்பு. இந்தியாவின் குடும்ப மரபுகளின்படி ஒரு மாமாவோ, ஒரு அப்பாவோ, ஒரு தாத்தாவோ பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், அதை வெளியே சொல்வதை அந்தக் குடும்பத்தினரே விரும்புவதில்லை.

ஒரு பெண் குழந்தை தனது மாமன் முறை உறவினரால் தத்தெடுக்கப்படுகிறார். அந்த பெண் குழந்தை அந்த உறவினரின் குடும்பத்தோடே வளர்கிறாள். அங்கே அவளுக்கு தம்பிகளும் இருக்கிறார்கள். 

ஒரு கட்டத்தில் அந்த உறவினர், அந்த பெண் குழந்தையை தவறாக அணுகத் தொடங்குகிறார். தொடர்ந்து இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஒருகட்டத்தில் மன உறுதியை வரவழைத்து அந்த உறவினர் மீது பெண் குழந்தை புகார் கொடுக்கத் தயாராகிறார்.  

இருபது வருடம் வரை அந்த உறவினருக்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று தெரிகிறது. அப்போதுதான் அந்த பெண் குழந்தை யோசிக்கிறார். அந்த உறவினர் சிறைக்கு சென்றுவிட்டால் தன் தம்பியை யார் பார்த்துக் கொள்வார்கள்? 

யார் அந்த குடும்பத்தைப் பார்த்துக் கொள்வார்கள் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் அந்த பெண் குழந்தை கேட்கிறாள். எந்தக் குடும்பத்தில் தங்கள் சககுடும்ப உறுப்பினர், தங்கள் ரத்தசொந்தம் ஒருவர் சிறைக்குச்  செல்வதையோ தூக்கிலிடப்படுவதையோ விரும்புவார்கள்? 

எனவே பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை கொண்டுவந்தாலும் இதுவே பாலியல் குற்றங்கள்  புகார்களாக பதிவு செய்யப்படுவதற்கு தடையாகிவிடக் கூடாது.  

2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்ட போதே பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பும், அக்கறையும் உறுதி செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகளை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்பதும்  வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது போக்சோ சட்ட திருத்தத்தில் மரணதண்டணையைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை என்று விதிக்கப்படும் பட்சத்தில் நீதிபதி, பாதிக்கப்பட்ட குழந்தையிடம் விசாரணை நடத்தும் விதம் மாறுபடும். 

இந்த விசாரணையே அந்தக் குழந்தைக்கு இன்னுமொரு கொடுமையாக மாறக் கூடும். அதிபட்சம் மரண தண்டனை என்று நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் நீதிபதி குற்றத்தை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்.  

பெரும்பாலும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு சாட்சிகள் இருப்பதில்லை. அதற்காக பாதிக்கப்பட்ட குழந்தையிடம் நேரடியாகவே பல கேள்விகளை அவர் கேட்க வேண்டியிருக்கும். இந்த அனுபவம் அந்த குழந்தைக்கு சொல்லவொண்ணா துயரத்தையே தரும்.

ஆனால் அதற்காக மரண தண்டனை என்ற உச்சபட்ச தண்டனை விதிக்கப்படும் பட்சத்தில் அந்த பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நேரிடும் நிலை, புகார் அளிப்பதில் இருந்து தடுக்கும் குடும்பம் என்று பல அம்சங்களையும் கருத்தில் கொண்டு அமைச்சர் அவர்கள் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.  

இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் நீதி கிடைக்க வேண்டும், அந்த குழந்தைக்கு குடும்பம் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான். 

குற்றத்துக்கான தண்டனையை அதிகரிப்பது ஒன்றே இதற்குத் தீர்வாகிவிடாது. எனவே இந்த சட்ட மசோதாவை  நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கோ, தேர்வுக் குழுவுக்கோ அனுப்பி  அதில் சொல்லப்படும் ஆலோசனைகளை ஏற்று திரும்பக் கொண்டுவரவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x