Published : 01 Aug 2019 01:12 PM
Last Updated : 01 Aug 2019 01:12 PM

உன்னாவ் பலாத்கார வழக்கை உ.பி.க்கு வெளியே விசாரணையை மாற்றும் கோரிக்கை: உச்ச நீதிமன்றம் ஏற்றது: ஆவணங்களை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு

புதுடெல்லி,

உன்னாவ் பலாத்கார வழக்கின் விசாரணையை உத்தரப்பிரதேச மாநிலம் அல்லாமல் வேறு மாநிலத்தில் விசாரணை வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், பலாத்கார வழக்கு, விபத்து ஏற்படுத்திய வழக்கு தொடர்பான அனைத்து ஆணவங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது.

மேலும், வழக்கை விசாரணை நடத்தும் சிபிஐ அதிகாரி நண்பகல் 12 மணிக்குள் தங்கள் முன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், சிறுமி ஒருவரை கடந்த 2017-ம் ஆண்டு பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தபோலீஸார் செங்காரை கைது செய்தனர், பாஜகவில் இருந்தும் செங்கார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் சிலர், வழக்கறிஞருடன் ரேபரேலியில் உள்ள உறவினரைச் சந்திக்கச் சென்றபோது லாரி ஒன்று இவர்கள் காரின் மீது மோதியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர், பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர்பிழைத்தார். 

இதையடுத்து சிறுமி பலாத்கார வழக்கு மற்றும் விபத்து ஏற்படுத்திய வழக்கு ஆகியவை சிபிஐக்கு மாற்றப்பட்டது. பாஜக எம்எல்ஏ செங்கார் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தனது உயிருக்கு பாதுகாப்பு தேவை எனக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாதிக்கப்பட்ட பெண் கடந்த 12-ம் தேதி கடிதம் அவரிடம் சென்று சேரவில்லை என்ற தகவல் வெளியானது. இந்த சம்பவம் குறித்து அறிந்த தலைமை நீதிபதி  ரஞ்சன் கோகய், தனக்கு வந்த கடிதத்தை ஏன் இன்னும் என்னிடம் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பி, அதற்கான விளக்கத்தை அளிக்க பதிவாளருக்கு நேற்று உத்தரவிட்டார். 

இந்த வழக்கின் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.

நீதிமன்றம் தொடங்கியதும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு, உன்னாவ் பலாத்கார வழக்கு, பாதிக்கப்பட்ட சிறுமி பயணித்த காரை விபத்துக்குள்ளான வழக்கு என வழக்கின் அனைத்து விவரங்களையும் எனக்கு தேவை என்பதை சிபிஐ இயக்குநருக்கு தெரிவியுங்கள் என்று சொலிசி்ட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்புள்ள அதிகாரி இன்று நண்பகலுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், வழக்கின் அனைத்து விவரங்களையும் இப்போதுவரை என்ன நடந்துள்ளது என அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். 

சிறிதுநேரம் வெளியே சென்ற சொலிசிட்டர் ஜெனரல் மீண்டும் தலைமை நீதிபதியிடம் வந்து பேசினார், சிபிஐ இயக்குநர் தற்போது விசாரணை தொடர்பாக வெளியே இருப்பதால் வழக்கின் ஆவணங்களை நண்பகல் 12 மணிக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை என்றார்.

இதைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், " சிபிஐ அமைப்புக்கும் தனியாக சொந்த விமானம் இருக்க வேண்டும், சொலிசிட்டர் ஜெனரலுக்கும் விமானம் இருக்க வேண்டும். இன்று மாலைக்குள் இரு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வழக்கின் விசாரணை உத்தரப்பிரதேசத்தில் நடக்காமல் வேறு மாநிலத்தில்  இடத்தில் நடத்த வேண்டும் என்ற பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையை ஏற்கிறோம்.  நாளை மீண்டும் இந்த நீதிமன்றம் விசாரணையை தொடங்கி  உத்தரவுகளை பிறப்பிப்போம்” என தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x