Published : 30 Jul 2019 10:21 AM
Last Updated : 30 Jul 2019 10:21 AM

கஃபே காஃபி டே ஊழியர்களுக்கு மாயமான உரிமையாளர் சித்தார்த்தா எழுதிய கடிதம் சிக்கியது: தற்கொலை சந்தேகம் வலுக்கிறது

மாயமான கஃபே காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தா அவரின் ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்கும் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

பிரின்ட் அவுட் எடுக்கப்பட்டு தேதியுடன் கையெழுத்திடப்பட்டுள்ள அந்தக் கடிதம் தற்கொலை குறிப்பு போல் இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக, கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த அரசியல்வாதியுமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் கஃபே காஃபி டே என்ற பிரபல காபி நிறுவனத்தின் உரிமையாளருமான வி.ஜி. சித்தார்த்தாவை திங்கள் கிழமை மாலை மாயமானார்.
மங்களூருவில் நேத்ராவதி ஆற்றின் குறுக்கே செல்லும் பாலத்தில் மாயமான அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், அவர்  ஊழியர்களுக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவுக்கும் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அந்தக் கடிதத்தில், "37 ஆண்டுகளாக கடின உழைப்பின் மூல நேரடியாக 30000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்த நிறுவனம் கஃபே காஃபி டே. ஆனால், இன்று நான் ஒரு லாபகரமான தொழில் முன்மாதிரியை உருவாக்கத் தவறிவிட்டேன். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்த பின்னரும் தோல்வியுற்றிருக்கிறேன்.

எனது முழு முயற்சியையும் இதில் போட்டிருக்கிறேன். என்னை நம்பியிருந்தவர்களை கைவிட்டமைக்காக மன்னிப்பு கோருகிறேன். நான் நீண்ட காலமாக போராடிவிட்டேன். இன்று தனியார் பங்குதாரர்கள் தரும் அழுத்தத்தை என்னால் பொறுக்க இயலவில்லை. அதற்காக 6 மாதங்களுக்கு முன்னதாகவே எனது நண்பரிடமிருந்து பெருந்தொகையைக் கடனாகப் பெற்று அவர்களுடனான பரிவர்த்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆனால், கடன் கொடுத்த மேலும் சிலர் அளிக்கும் நெருக்கடிக்கு நான் பணியும் சூழல் உருவாகியிருக்கிறது.

வருமான வரித் துறையின் முன்னாள் இயக்குநர் எனக்கு தாங்க முடியாத அழுத்தத்தைக் கொடுத்தார். எங்களது பங்குகளை முடக்கினார். இந்த நியாயமற்ற நடவடிக்கையால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டது.

நீங்கள் ஒவ்வொருவரும் தைரியமாக இருந்து இந்தத் தொழிலை முன்னெடுக்க வேண்டும். எனது தவறுகளுக்கு நான் மட்டுமே காரணமே. நிர்வாகத்தின் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் நானே பொறுப்பு. எனது பரிவர்த்தனைகள் பற்றி என் குழுவினருக்கோ மூத்த நிர்வாகிகளுக்கோ கணக்கு தணிக்கையாளர்களுக்கோ எதுவும் தெரியாது. சட்டம் என்னை மட்டுமே பொறுப்பாளியாகப் பார்க்க வேண்டும். இத்தகவலை நான் என் குடும்பத்தினரிடம் இருந்துகூட மறைத்துவிட்டேன்.

எனது நோக்கம் யாரையும் ஏமாற்ற வேண்டும் என்பதல்ல. ஒரு தொழில் முனைவராக நான் தோற்றுவிட்டேன். என்றாவாது ஒருநாள் நீங்கள் என்னை புரிந்து கொண்டு மன்னிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

என் சொத்துகளின் பட்டியலையுன் அதன் உத்தேச மதிப்பையும் இணைத்துள்ளேன். அதன் மதிப்பீடுகள் நான் செலுத்த வேண்டிய கடனைவிட அதிகமாகவே இருக்கிறது. அதனால், எல்லோருக்கும் கடனை திருப்பிச் செலுத்த முடியும் என நம்புகிறேன்" இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

சித்தார்த் மாயமான தகவல் பரவியதையடுத்து இன்று காலை பங்குச்சந்தை தொடங்கும்போதே கஃபே காஃபி டே நிறுவனத்தின் பங்குகள் வெகுவாகச் சரிந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x