Published : 27 Jul 2019 04:24 PM
Last Updated : 27 Jul 2019 04:24 PM

‘ஆசம்கானை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்’ - ரமாதேவி ஆதங்கம்

புதுடெல்லி

ஆட்சேபகரமான முறையில் பாலியல் ரீதியான கருத்து தெரவித்த சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம்கானை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என பாஜக எம்.பி. ரமாதேவி கூறியுள்ளார். 

மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா இல்லாத காரணத்தால் அவையை பாஜக எம்.பி. ரமாதேவி நடத்தினார். அப்போது முத்தலாக் மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.

மசோதா குறித்து சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் பேசும்போது, மற்ற உறுப்பினர்கள் அவருக்கு இடையூறு செய்தனர். அப்போது பேசிய ரமாதேவி, “மற்ற உறுப்பினர்களுக்கு நீங்கள் (ஆசம்கான்) பதிலளிக்கவேண்டாம். நீங்கள் உங்கள் கருத்தை அவைக்குத் தெரிவியுங்கள்” என்றார்.

அப்போது ரமாதேவி குறித்து ஒரு ஆட்சேபகரமான கருத்தை ஆசம்கான் தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மன்னிப்பு கோர வேண்டும் என நாடாளுமன்றத்தில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து பெண் எம்.பி.க்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ரமாதேவி விரிவான பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ''ஆசம்கான் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது நான் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்தேன். சபாநாயகராக இருக்கும்போது சமமாக நடந்துகொள்ள வேண்டும். அதனை எண்ணியே நான் அனைவரையும் சமமாகவே அவையில் நடத்தினேன். அவர் சில எம்.பி.க்களைக் குறிப்பிட்டு பார்த்துப் பேசிக் கொண்டு இருந்தார்.

மற்றவர்களைப் பார்த்துப் பேச வேண்டாம். சபாநாயகரை பார்த்துப் பேசுங்கள் எனக் கூறினேன். அப்போது தான் அந்த ஆட்சேபகரமான பாலியல் ரீதியான வார்த்தைகளை அவர் கூறினார். அந்த வார்த்தையை வெளியே சொல்ல நான் விரும்பவில்லை. அவர் மன்னிப்பு கேட்டாலும் கூட அவரை நான் மன்னிக்கத் தயாராக இல்லை. 
ஒவ்வொரு மனிதருக்கும் தாய், மனைவி, மகள் என பெண் உறவினர்கள் இருப்பார்கள். அவர்களை மதிக்க வேண்டும். ஆசம்கானின் பேச்சு பெண்களை மட்டும் அவமதிக்கவில்லை. ஆண்களைக் கூட அவமதித்துவிட்டது’’ எனக் கூறினார்.  
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x