Last Updated : 24 Jul, 2019 09:10 PM

 

Published : 24 Jul 2019 09:10 PM
Last Updated : 24 Jul 2019 09:10 PM

கர்நாடகத்தில் நிகழ்ந்தது ராஜஸ்தான், ம.பி.யிலும் நிகழ்ந்து விடுமோ? காங்கிரஸார் கவலை 

கட்சிக்குள் உள்ளேயும் வெளியேயும் அதிகார விரும்பிகளின் செயல்பாடுகளினால் கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி குமாரசாமி தலைமையில் நீடிக்க முடியாமல் கவிழ்ந்தது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ள எச்சரிக்கை தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஆட்சிக்கும் கோஷ்டி மோதல்களினால் ஏற்படுமோ என்ற அச்சம் அக்கட்சியினரிடையே எழுந்துள்ளது. 

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள ஆட்சி நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவி கவிழ்ந்தது. இதனையடுத்து ராகுல் காந்தி தன் ட்விட்டரில், “அதிகாரம் நோக்கிய சுயநலமிகள் சிலரால் அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் அதிகார விரும்பிகள், சுயநலமிகளால் குமாராசாமி அரசு முதல் நாளிலிருந்தே குறிவைக்கப்பட்டது. இந்த அரசு அவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு இடையூறாக இருந்ததாக அவர்கள் பார்த்தனர். அவர்களது பேராசை இன்று வென்றுள்ளது. ஜனநாயகம், நேர்மை, மற்றும் கர்நாடக மக்களுக்குத்தான் இழப்பு” என்று பதிவிட்டிருந்தார். 

அவர் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் சித்தராமையா உள்ளிட்ட சிலரைத்தான் ராகுல் காந்தி குறிப்பிடுகிறார் என்பது ஒன்றும் ரகசியம் அல்ல. சித்தராமையாவுக்கும் கவுடாக்களுக்கும் இடையே சுமுகமான உறவுகள் இருந்ததில்லை. 

கடந்த ஓராண்டு காலமாக சித்தராமையா ஆதரவாளர்கள் குமாரசாமி அரசுக்கு எதிராக பேசி வந்தனர்.  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு அதிருப்தி ஏற்பட கர்நாடக காங்கிரஸ் தலைமைதான் என்று பலரும் நம்புகின்றனர். 

கே.சி. வேணுகோபால் அனுபவமற்றவர். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர்களை சரியாகக் கையாள முடியவில்லை. இதனையடுத்து குமாரசாமி அடிக்கடி ராகுல் காந்தியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.  ஆனால் ராகுல் காந்தி லோக்சபா தேர்தல் தோல்விகளை அடுத்து தலைவர் பதவியிலிருந்து விலகியதால் கர்நாடக காங்கிரஸ் குழப்பங்களை சரிவரக் கையாள தலைவர்கள் இல்லாமல் போனது. இதே பிரச்சினைதான் தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானிலும் இத்தகைய நெருக்கடி ஏற்பட்டால் என்ன ஆகும் என்ற கவலைகளை காங்கிரஸாரிடையே ஏற்படுத்தியுள்ளது. 

இந்த இரண்டு மாநிலங்களிலும் கூட காங்கிரஸ் ஒரு மெலிதான பெரும்பான்மையில்தான் ஆட்சி செய்து வருகிறது. அதுவும் சுயேச்சை மற்றும் பகுஜன் சமாஜ் அல்லது சமாஜ்வாதி ஆகியோர் ஆதரவில் ஆண்டு வருகிறது.  லோக்சபா தேர்தல் காங்கிரஸ் படுதோல்விகளை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. 

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியிலும் கோஷ்டி மோதல் பெயர் பெற்றது. இங்கு காங்கிரஸ் தொண்டர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதை விட தலைவர்களுக்கே விசுவாசமாக இருந்து வருகின்றனர். 

ம.பி. முன்னாள் முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான், காங்கிரஸின் உட்கட்சிப் பூசல்கள் அரசை வீழ்த்தி விடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.  “நாங்கள் அரசை வீழ்த்த மாட்டோம், ஆனால் பகுஜன், சமாஜ்வாதி சும்மா இருப்பார்கள் என்பது உறுதியானதல்ல” என்றார் ஷிவ்ராஜ் சிங் சவுகான். 

இன்று, “பாஜக தலைமை ஒரு சிக்னல் கொடுத்தால்போதும், அடுத்த 24 மணிநேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு இருக்காது”  என்று எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மொத்தம் உள்ள 231 தொகுதிகளில்  பெரும்பான்மைக்கு 116 எம்எல்ஏக்கள்  தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்எல்ஏக்களும், சமாஜ்வாதி 2 எம்எல்ஏக்கள், பகுஜன் சமாஜ் 1 எம்எல்ஏ , 1 சுயேட்சை ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வருகிறது. பாஜக 108 இடங்களுடன் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது.

“கர்நாடகத்தில் இருந்த அரசியல் சூழலைக் காட்டிலும் மத்தியப் பிரதேசத்தில் மிக மோசமாக இருக்கிறது. கூட்டணி அரசு என்பது சித்தாந்த ரீதியாகவோ, கொள்கை அடிப்படையிலோ இல்லை. பேராசையின் அடிப்படையில் இருக்கிறது. எங்கள் கட்சியின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 தலைமையிடம் இருந்து சிக்னல் கிடைத்துவிட்டால், கமல்நாத் அரசு அடுத்த 24 மணிநேரம் கூட தாங்காது" என்று பாஜக தெரிவித்ததையடுத்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி சிக்கலுக்குள்ளாக வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x