Published : 23 Jul 2019 07:52 PM
Last Updated : 23 Jul 2019 07:52 PM

கர்நாடக அரசு கவிழ்ந்தது: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதன் மூலம் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 6 வாக்குகள் வித்தியாசத்தில்  குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் பதிவாகின.

4 நாட்களாக இழுக்கப்பட்ட சட்டப்பேரவை அமர்வு தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.  பாஜக தலைவர் எடியூரப்பா வெற்றிச் செய்கையை செய்தார். இத்துடன் 14 நாட்கள் அரசியல் நாடகம் முடிவுக்கு வந்தது. அடுத்த அரசு ஆட்சியமைக்கும் போது இன்னொன்று தொடங்கும். 

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்து மும்பை சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர். இதனிடையே,  2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று,  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். 

இவர்களை சமாதானப்படுத்தி மீண்டும் பெங்களூருக்கு அழைத்து வர அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 18, 19-ம் தேதிகளில் விவாதம் நடந்தது. அது முழுமை பெறாததால், இந்த விவாதம் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பை 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கக் கோரி முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்தார். ஆனால், இதை ஏற்க சபாநாயகர் ரமேஷ் குமார் மறுத்துவிட்டார். மேலும், மும்பையி்ல் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவிட்டும் அவர்கள் வரவில்லை என்று ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சி தலைமை சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தன.

அந்தப் புகாரின் அடிப்படையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை 11 மணிக்கு தன்னைச் சந்திக்க வேண்டும் எனக் கோரி சம்மன் அனுப்பி சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார்.

இதற்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. ஆனால், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒத்துழைக்கவில்லை. முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் தொடர்ந்து அவகாசம் கேட்டனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகர் ரமேஷ் குமார், " நாளை (இன்று) மாலை 4 மணிக்குள் விவாதம் அனைத்தையும் முடிக்க வேண்டும். மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க  வேண்டும். நாளை காலை 10 மணிக்கு அவையை ஒத்திவைக்கிறேன் " என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா, ஜேடிஎஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் பேசினார்கள்.

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக சுயேட்சை எம்எல்ஏக்கள் ஹெச். நாகேஷ், ஆர். சங்கர் ஆகியோர் பெங்களூரு ரோஸ் கோர்ஸ் பகுதியில் இருந்து புறப்பட இருந்தனர். ஆனால், அவர்களை வெளியே வரவிடாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் செய்து சுற்றி வளைத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சட்டப்பேரவை வளாகத்தில் கூடியிருந்த பாஜகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதையடுத்து அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டு காங்கிரஸ், பாஜகவினரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். சட்டப்பேரவை வளாகத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்: குமாரசாமி

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது முதல்வர் குமாரசாமி பேசுகையில், " நான் சபாநாயகரை மதிப்புக்குறைவாக நடத்துவது னது நோக்கம் இல்லை. மாநிலத்தில் உள்ள 6.5 கோடி மக்களிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் திருமணம் செய்தபோது, நான் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று என் மனைவி எனக்கு கட்டளையிட்டார். எனக்கு ஒருபோதும் அரசியலில் விருப்பம் இல்லை. நான் இங்கு இந்த அவையில் அவருடன் அமர்ந்திருப்பதே என் விதிதான்.

என் தந்தை எப்போதும் நான் அரசியல் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், ஆனால், என் சகோதரர் ரேவண்ணாவுக்கு அவரின் ஆசிகளை வழங்கினார். பாஜகவின் சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி தவறாகச் சித்தரித்தன. அது குறித்து அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். நம்முடைய சமூகத்துக்கும், இளைஞர்களுக்கும் சமூக ஊடகங்கள் மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும்.

நான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல முடியும் என்றால், கடைசி நேரம் வரை நான் முயற்சிப்பேன். இங்கு நடக்கும் சம்பவங்களைப் பார்த்து முதல் முறையாக எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். அவர்களைப் பாதுகாக்கும் வகையில் நான் அரசைப் பாதுகாப்பேன். எனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை. என்னுடைய பதவியை நான் மகிழச்சியாக தியாகம் செய்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் குமாராசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கர்நாடகாவில் கவிழ்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x