செய்திப்பிரிவு

Published : 23 Jul 2019 14:45 pm

Updated : : 23 Jul 2019 15:26 pm

 

ட்ரம்புடன் பேசியது என்ன? - நாட்டு மக்களுக்கு தெரிவியுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

trump-s-kashmir-claim

புதுடெல்லி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியபடி காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி கோரி இருந்தால் அவர் இந்திய நலனுக்கு எதிராக துரோகம் செய்து விட்டார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று வெள்ளை மாளிகையில் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார்.

அப்போது, இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், "ஜப்பானில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்த ஜி-20 மாநாட்டின்போது, பிரதமர் மோடியிடம் பேசினேன். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் நான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி என்னிடம் கோரிக்கை விடுத்தார்" எனத் தெரிவித்தார்.

ஆனால், அதிபர் டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும்படி மோடிக் கேட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது உண்மையாக இருந்தால் இந்தியாவின் நலன் மற்றும் 1972-ம் ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்துக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துள்ளார்.

அப்படி செய்யவில்லை என வெளியுறவுத்துறை விளக்கம் அளிக்கிறது. அதிபர் ட்ரம்புடனான சந்திப்பின்போது என்ன நடந்தது என்பதை பிரதமர் மோடி வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும்’’ என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்பிரதமர் மோடிராகுல் காந்திTrump’s Kashmir claim
Popular Articles

You May Like

More From This Category

More From this Author