Published : 20 Jul 2019 04:06 PM
Last Updated : 20 Jul 2019 04:06 PM

தேசத்துக்கு எது நல்லதோ அதையே பிரியங்கா செய்வார்.. மனைவியைப் பாராட்டிய ராபர்ட் வதேரா

"தேசத்துக்கு எது நல்லதோ அதையே பிரியங்கா செயல்படுத்துவார்.." என்று தனது மனைவி உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதைப் பாராட்டி ட்வீட் பதிவிட்டுள்ளார் ராபர்ட் வதேரா.

உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத் தகராறில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது கிராமத் தலைவரும் அவரது உறவினர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு முதல் அங்கே தங்கியிருக்கிறார். அவருக்கு மின்சாரம், தண்ணீர் வசதிகூட செய்துதராமல் உத்தரப் பிரதேச அரசு சித்ரவதை செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், இன்று (ஜூலை 20) விருந்தினர் மாளிகைக்கு வந்த  பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரில் 3 பேரை மட்டும் பிரியங்கா சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரியங்காவிடம் அந்தப் பெண்கள் தங்கள் சோகத்தைச் சொல்லி புலம்பும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அவர்களை சந்தித்துவிட்டு திரும்பிய பிரியங்கா சோன்பத்ராவுக்கு நேரில் செல்லாமல் ஓயமாட்டேன். வேண்டுமென்றால் என்னை கைது செய்து கொள்ளுங்கள் என்று பிரியங்கா தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் எப்போதுமே உங்களுடைய கருணையையும் மற்றவர்களின் துன்பத்தில் காட்டும் அக்கறையையும், நேர்மையையும் மதித்திக்கிறேன். தற்போது வன்முறையால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் பக்கம் நீங்கள் நிற்பதால் உங்களை அதிகமாக மதிக்கிறேன். நீங்கள் எப்போதுமே தேசத்துக்கு சரியானதையே செய்வீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x