Published : 20 Jul 2019 01:14 PM
Last Updated : 20 Jul 2019 01:14 PM

முஸ்லிம்கள் கவுரவமான வாழ்க்கையை வாழ முடியவில்லை: சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான்

பாகிஸ்தானுக்கு இடம்பெயராத முஸ்லிம்களே இன்று தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.  இந்த நாட்டில் முஸ்லிம்கள் கவுரவமான வாழ்க்கையை வாழ முடியவில்லை என சமாஜ்வாதி எம்.பி. ஆசம்கான் தெரிவித்திருக்கிறார். 

பதுப் பாதுகாவலர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஆசம்கான், "எங்களது மூதாதையர்கள் பாகிஸ்தான் செல்லாமல் விட்டுவிட்டனர். அவர்கள் இந்தியாதான் தங்கள் நாடு எனக் கருதினார்கள். மவுலானா ஆசாத், ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல், ஏன் மகாத்மா காந்திகூட முஸ்லிம்கள் புலம்பெயர்ந்து பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்றுதான் கோரினர். ஆனால், நாங்கள் அன்று பிரிந்து செல்லாமல் தவறு செய்துவிட்டோம். அதனால் இன்று தாக்கப்படுகிறோம்.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் கவுரமான வாழ்க்கையை வாழ முடியவில்லை. 1947-ம் ஆண்டு முதலே வெறுக்கத்தக்க வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறோம். இதை நினைத்து வெட்கப்படுகிறோம்" என்றார்.

சமீபகாலமாக பசு பாதுகாவலர்களால் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக, மாடுகளைக் கடத்தியதாக தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை சுட்டிக்காட்டியே ஆசம்கான் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில் சோன்பத்ரா மாவட்டத்தில் நிலத் தகராறில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஆசம் கானின் பெயரை போலீஸார் எஃப்.ஐ.ஆரில் சேர்த்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டு பேசிய ஆசம்கான், "ராம்பூரில் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்து நான் வெற்றி பெற்றேன். அதனை பொறுக்க முடியாமலே என் மீது போலி குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x