Published : 17 Jul 2019 06:13 PM
Last Updated : 17 Jul 2019 06:13 PM

துப்பாக்கி டான்ஸ் ஆடிய 'சாம்பியன்’ பாஜக எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்: அதிரடி நடவடிக்கை

உத்தராகண்ட் மாநிலம் கன்பூர் எம்.எல்.ஏ. பிரணவ் சிங் 4 துப்பாக்கிகளுடன் பாலிவுட் பாடலுக்கு நடனம் ஆடியது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதையடுத்து மாநில பாஜக தலைமை அவரை 6 ஆண்டுகளுக்கு நீக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தற்போது அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாஜாக ஊடகத் தலைமை அனில் பலூனி, பிரணவ் சிங்கின் நடவடிக்கை தொடர்ந்து பொதுவெளியில் ஒழுங்கின்மையாக இருந்து வருவதைக் கருத்தில் கொண்டு கட்சியிலிருந்து அவரை 6 ஆண்டுகளுக்கு நீக்கியிருக்கிறோம் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி டான்ஸ் வீடியோ வைரலானதையடுத்து உத்தராகண்ட் பாஜக தலைவர் அஜய் பட் எம்.எல்.ஏ. பயன்படுத்திய முறையற்ற வார்த்தைகள் கண்டனத்துக்குரியது அதனால்தன அவர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது என்றார். 

அஜய் பட் இது தொடர்பாக மேலும் கூறும்போது, “உத்தராகண்டுக்கு எம்.எல்.ஏ. பயன்படுத்திய முறையற்ற வார்த்தை உச்சபட்ச கண்டனத்துக்குரியது. கட்சி இதனால் அவமானமடைந்துள்ளது. அவரை ஏன் கட்சியிலிருந்து நீக்கக் கூடாது என்று கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். 10 நாட்களுக்கு பதில் வேண்டும் என்று கேட்டிருந்தோம், கட்சி இதனை சீரியஸாகப் பார்க்கிறது, கடும் நடவடிக்கைக்குரியது” என்று தொடர் ட்வீட்களில் அவர் தெரிவித்தார்.

வைரலான அந்த வீடியோவில் மதுபோதையில் இருந்த பிரணவ் சிங், துப்பாக்கிகளை காற்றில் ஆட்டினார். மற்றவர்களும் அவருடன் சேர்ந்து ஆடினர். 

முன்னாள் பளுதூக்குதல் வீரரான பிரணவ் சிங், தன் பெயருடன் சாம்பியன் என்ற அடைமொழியையும் சேர்த்துக் கொண்டுள்ளார். 2002-ல் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். 2007 மற்றும் 2012-ல் காங்கிரஸ் வேட்பாளராக வென்றார். 2016-ல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவினார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x