Published : 17 Jul 2019 04:18 PM
Last Updated : 17 Jul 2019 04:18 PM

ஜிஎஸ்எல்வி ராக்கெட் கோளாறு சீரானது: சந்திராயன் 2 அடுத்த வாரம் ஏவப்படும்?

புதுடெல்லி

சந்திராயன் 2 விண்கலத்தை ஏவும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதால் அடுத்தவாரம் விண்ணில் ஏவப்படலாம் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிலவை ஆராய்வதற்கான சந்திராயன் 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஜூலை 15 அன்று விண்ணில் ஏவ திட்டமிட்டது.

நிலவில் நீர் இருப்பதைத் தாண்டி நிலவின் முப்பரிமாணப் படம், கனிம வரைபடம், துருவங்களில் பனிப்பாறை வடிவில் நீர் உள்ளது எனப் பல தகவல்கள் சந்திரயான்-1 மூலம் கிடைத்தன. இவ்வாறு நிலவின் தரையிலிருந்து 100 கி.மீ. தொலைவிலிருந்து சந்திரயான்-1 கண்டறிந்தவற்றை, நிலவின் தரையில் இறங்கி உறுதிப்படுத்தும் விதத்தில் சந்திரயான்-2 உருவாக்கப்பட்டது.

இந்த விண்கலம் ஏவுவுதற்கு சில மணிநேரத்துக்கு முன்பாக, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் எரி பொருள் நிரப்பும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படுவது கடைசி நிமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் நிரப்பப்பட்ட அனைத்து வகை எரி பொருட்களும் வெளியேற்றப்பட்டன. பிறகு தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. இதனை சரி செய்வதற்கு சில மாதங்கள் வரை கால தாமதம் ஆகலாம் என கருதப்பட்டது.

இந்தநிலையில் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், அடுத்த சில நாட்களில் விண்ணில்  ஏவுவதற்கு ராக்கெட் தயாராகி விடும் எனவும இஸ்ரோ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த மாத இறுதிக்குள் சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என தெரிகிறது. முழுமையான பணிகள் முடிந்து விட்டால் அநேகமாக திங்கட்கிழமை அன்று சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்படலாம் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x